கம்மாபுரம் அருகே விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக, இயற்கை முறை விவசாயம் மூலம் தோப்பு நெல்லி பயிரிட்டு, அறுவடை செய்து வருகிறார்.
கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூரைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால் இயற்கை முறை விவசாயத்தில் 10 ஆண்டுகளாக கரும்பு, நெல், வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகிறார்.
8 ஆண்டுகளுக்கு முன், எட்டு ஏக்கரில் தோப்பு நெல்லிச் செடிகளை நடவு செய்தார். மூன்றாவது ஆண்டிலிருந்து காய்க்க துவங்கியது.
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூ பூத்து காய்க்கத் துவங்கி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் வரை அறுவடை நடக்கும். தற்போது அறுவடை துவங்கியுள்ளது. விவசாயி வேணுகோபால் கூறியதாவது:
- இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல்லி பயிர் செய்து வருகிறேன்.
- அயல் மகரந்த சேர்க்கைக்காக கிருஷ்ணா, காஞ்சன், சக்கையா, என்.ஏ -7 உள்ளிட்ட நான்கு வீரிய ரக கன்றுகளை சேர்த்து நடவு செய்துள்ளேன்.
- இயற்கை முறையில் அமுத கரைசல் தயாரித்து, அதனை அடியுரமாக பயன்படுத்துகிறேன்.
- மாட்டு சாணம் ஒரு கிலோ, கோமியம் 10 லி., வெல்லம் 2 கிலோ ஆகியவற்றை சேர்த்து 3 நாட்கள் வரை நொதிக்க வைத்து, அமுத கரைசலை தயாரித்து, அதனை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, வாய்க்காலில் விடலாம்.
- கைத்தெளிப்பான் மூலமும் தெளிக்கலாம்.
- பூச்சு தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டைகளை இடித்து மூன்று நாட்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து, பூச்சி விரட்டி தயாரித்து, அதனை ஏக்கருக்கு 3 லிட்டர் தெளிக்கலாம்.
- அல்லது பூண்டு, வேப்ப இலைகளை சேர்த்து இடித்து, அதனை கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊற வைத்தும் தெளிக்கலாம்.
- ஒரு முறை நடவு செய்தால் 40 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம்.
- காய்க்கத் துவங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை சுமாரான மகசூலும், 20 முதல் 40 ஆண்டுகள் வரை அதிகபடியான மகசூலும் கிடைக்கும்.
- இயற்கை முறையில் பயிர் செய்யக் குறைந்த செலவு ஆவதுடன், ஏக்கருக்கு 5 முதல் 6 டன் வரை மகசூல் பெறலாம்.
- அறுவடை செய்த நெல்லிக்காய்களை ஆரம்பத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஒட்டச்சத்திரம் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தேன். இந்தாண்டு கிலோ 10 ரூபாய் வரை வியாபாரிகளிடமும், சில்லறையாகவும் விற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்