இயற்கை வேளாண்மை முன்னோடி அந்தோணிசாமி

இயற்கைவழி வேளாண் வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு முதன்மையான பங்கு உண்டு. ‘புளியங்குடி இரட்டையர்கள்’ என்று அழைக்கப்படும் கோமதிநாயகம், அந்தோணிசாமி ஆகிய இருவரும் இயற்கைவழி வேளாண்மையில் மூத்தவர்கள், முன்னோடிகள்.

antony_2620273f

சாதனை விளைச்சல்

இயற்கைவழி வேளாண்மை என்பது சிறிய பண்ணைகளில்தான் வெற்றிகரமாக சாத்தியப்படும் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கைவழி வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று மெய்ப்பித்தவர் அந்தோணிசாமி.

நெல், எலுமிச்சை, கரும்பு, காய்கறி என்று பல்வேறு பயிர்களிலும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தாமலேயே சாதனை விளைச்சல்களை இவர் பெற்றுள்ளார். பொதுவாக வேதி உப்பு உரங்களைப் பயன்படுத்தி விளைச்சல் எடுக்கும் உழவர்களைக் காட்டிலும், இவர் சற்றுக் கூடுதலாக விளைச்சல் எடுப்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.

பசுந்தாள் உரம்

நெல்லில் எவ்வித வெளி இடுபொருள் செலவுமின்றி, விளைச்சல் வீழ்ச்சியின்றி ஆண்டுதோறும் தொடர்ச்சியாக மகசூல் எடுத்துவருகிறார். நாட்டு ரக விதைகளைப் பயன்படுத்துகிறார். இவரது அடிப்படையான நுட்பம் பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து மண்ணில் சேர்ப்பதுதான். மண்ணை வளப்படுத்தும் உத்தியான பசுந்தாள் உரச்செடிகளை முதலில் விதைத்து மடக்கி உழுகிறார்.

அத்துடன் ‘தொழியை’ நன்றாக ஊற விடுகிறார். நல்ல ‘தொழி’ மணம் வரும்வரை காத்திருக்கிறார். இதுதான் அடிப்படை என்பது, இவருடைய அனுபவப் பாடம். இதனால் ஏராளமாக நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்படுகிறது. நன்மை செய்யும் குச்சிலங்கள் (பாக்டீரியாக்கள்) பெருகுவதால் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணுக்குள் சேர்க்கப்படுகிறது.

காய்ச்சல், பாய்ச்சல்

அதன் பிறகு நடவு செய்கிறார். நட்ட பதினைந்தாம் நாள் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் பத்து மடங்கு நீர் சேர்த்துத் தெளிப்பு கொடுக்கிறார். களைகளைக் கட்டுப்படுத்த நடவு வயலில் ஆறு நாட்களுக்கு நீரை நிறுத்துகிறார். அதன் பின்னர் காய்ச்சலும் பாய்ச்சலுமாகவே நீர் கொடுக்கிறார், தொடர்ந்து நீர் கட்டுவது இல்லை.

நட்டு இருபத்தைந்தாம் நாள் ஒரு லிட்டர் மீன்பாகுக் கரைசலுடன், 100 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கிறார். ஒரு ஏக்கருக்கு இது போதுமானதாக உள்ளது. நட்ட ஐம்பதாவது நாள் ஒரு லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டியுடன் 10 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கிறார். அதன் பின்னர் ஏழு நாள் கழித்து ஆவூட்டம் 250 மில்லியுடன், 10 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கிறார்.

தொடர்ச்சியாகக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சிவருகிறார். பயிர் சோர்வாக இருந்தால் மீண்டும் ஒரு முறை மீன்பாகு தெளிக்கிறார். கதிர் நாவாய்ப் பூச்சி, பூஞ்சாளத் தாக்குதல் ஏதும் இருப்பதாகத் தெரிந்தால், நன்கு விளைந்த – ஒடித்தால் மஞ்சள் நிறச் சாறு வரும் தன்மையாக உள்ள சோற்றுக் கற்றாழை மடல் ஒரு கிலோ எடுத்துக்கொண்டு, அத்துடன் அரைக் கிலோ சிறு பற்கள் கொண்ட வெள்ளை பூண்டு, 1 கிலோ நயம் துளசி இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஆட்டி எடுத்துக்கொள்கிறார். இந்தக் கரைசல் 1 கிலோவுடன் 10 லிட்டர் நீரைச் சேர்த்துத் தெளித்துவிடுகிறார். இது நல்ல பூச்சிவிரட்டி, பூஞ்சாளக் கொல்லியாக வேலை செய்கிறது.

செலவில்லா விவசாயம்

‘எனது வயலில் இயற்கை வழி வேளாண்மையைக் கைக்கொண்ட பின்னர் ஒரு சதுர மீட்டரில் 4 வகையான தட்டான்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இன்னும் குழவிகள் போன்ற பூச்சிக் கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இருக்கின்றனர். இப்போது சொல்லுங்கள் வேதி வேளாண்மையைவிட எனக்கு என்ன கூடுதலாகச் செலவு ஆகிவிட்டது’ என்று நெஞ்சை உயர்த்திப் பெருமிதமாகத் தனது பட்டறிவைப் பகிர்ந்துகொள்கிறார்.

இதையெல்லாம் சொல்லிவிட்டு, மற்றொரு இன்ப அதிர்ச்சியையும் கொடுக்கிறார். ‘இந்த வேலைகளெல்லாம் முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குத்தான், பின்னர் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இயற்கை தானாகவே தன்னைச் சரிசெய்துகொள்ளும். நான் இப்போது எதுவும் கொடுப்பதில்லை. வண்டிக்கு டீசலும் மோட்டாருக்கு மின்சாரமும் மட்டுமே நான் வெளியிலிருந்து வாங்குகிறேன்’ என்று அதிரடியாகச் சொல்கிறார் அந்தோணிசாமி.


கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
அந்தோணிசாமி தொடர்புக்கு: 09942979141

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை வேளாண்மை முன்னோடி அந்தோணிசாமி

  1. SIVAPRAKASAM.S says:

    “என்னை பொருத்தவரை இயற்கையை நேசிக்கும் அனைவரும் கடவுள்தான்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *