ஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்!

‘உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு இயற்கை விவசாயம் முதற்கொண்டு பல வகை விவசாய முறைகளைப் பின்பற்றிவருகிறார்கள்.

அந்த வகையில், இப்போது பல இடங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவருவது… ஒருங்கிணைந்த விவசாயம்!

உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான மக்களின் முக்கிய உணவு, அரிசி. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் மட்டுமே அரிசி விளைவிக்கப்படுகிறது. அதிலும், ஆசியாவில் மட்டும் சுமார் 90 சதவீத அரிசி பயிரிடப்படுகிறது. எனினும், பல கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடன் படுக்கச் செல்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள்.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் தரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளிக்கின்றன. அதாவது, நமது மக்களுக்குத் தாவரங்களின் மூலம் கிடைக்க வேண்டிய புரதம் கிடைத்தாலும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விலங்குப் புரதம் கிடைக்கவில்லை. அதனால், பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்கின்றன அந்த அமைப்புகள்!

இந்நிலையில் உழவர்களும், அவர்கள் மூலமாக இதர மக்களும் பயன்படும் வகையில், ‘நெல் – மீன் – கோழி’ எனும் ஒருங்கிணைந்த வேளாண் முறையை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை, முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விவசாய முறையின் மூலம், இயற்கை முறையில் நெற்பயிர் விளைவிக்கப்படுவதுடன், பற்றாக்குறையாக உள்ள விலங்குப் புரதத்தை ஈடுசெய்ய மீன், கோழி வளர்ப்பும் கைகொடுக்கின்றன. மேலும், பொருளாதார ரீதியாகவும் இந்த ஒருங்கிணைந்த விவசாய முறை மிகவும் லாபகரமானது.

5 சென்ட் போதும்

இந்த விவசாய முறை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் இயக்குநர், ஆர்.எம்.கதிரேசன் பகிர்ந்துகொண்டார்:

“1994-95-ம் ஆண்டு காலகட்டத்தில், நான் உழவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது முதுநிலை மாணவர்களுடன் இணைந்து நெல் வயல்களில் மீன்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டோம். அது வெற்றிகரமாக அமைந்தது.

பிறகு, 96-ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழக நிலத்திலேயே ‘நெல் – மீன் – முயல்’, ‘நெல் – மீன் – அசோலா’, ‘நெல் – மீன் – கோழி’ எனப் பல வகை ஒருங்கிணைப்புகளின் மூலம் நெற் பயிரை விளைவிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில், ‘நெல் – மீன் – கோழி’ ஒருங்கிணைப்பு, நல்ல லாபத்தைத் தந்தது. இதர ஒருங்கிணைப்புகளில் சிற்சில குறைகள் இருந்தன.

இந்த ஒருங்கிணைந்த வேளாண்மையை மேற்கொள்ள, ஒரு ஏக்கர் நிலத்தில் 5 சென்ட் மட்டும் போதும். நிலத்தின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீதத்துக்கு மேல் போகாதபடி, வயல் ஓரத்தில் ஒரு மீட்டர் ஆழம், ஒரு மீட்டர் அகலத்தில் சிறிய பள்ளம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

Courtesy: Hindu

வயல் முழுக்கத் தேங்கியிருக்கும் நீரின் வெப்பநிலையில் மாற்றம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், வயலின் ஓரத்தில் உள்ள இந்தப் பள்ளத்தில் இருக்கும் நீரின் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தப் பள்ளத்தில் ரோகு, மிர்கால், கட்லா, கெண்டை, புல் கெண்டை ஆகிய மீன் இனங்களை விடவேண்டும். சுமார் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மீன் குஞ்சுகளை விட வேண்டும். ஒவ்வொரு இனத்திலும் 20 குஞ்சுகள் வீதமாக 100 குஞ்சுகளை விடவேண்டும். இந்த மீன்கள் காலையும் மாலையும் வயலில் நீந்திக்கொண்டு, களைகளை உணவாக உட்கொள்ளும். மதிய நேரத்தில் வயலில் உள்ள நீரின் வெப்பம் அதிகரிக்கும். எனவே, அப்போது அவை வயலின் ஓரத்தில் உள்ள பள்ளத்துக்கு வந்துவிடும்.

மதிப்புக்கேற்ற விலை

கோழிகளுக்கு 20 முதல் 24 சதுர அடிக்கு ஒரு கூண்டு அமைக்க வேண்டும். 6×4 என்ற அளவில், அந்தக் கூண்டு இருக்க வேண்டும். நிலத்தில் 4 அடி ஆழத்துக்கு கான்கிரீட் தூண்களைப் புதைத்து, நிலத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு அந்தத் தூணை நட வேண்டும்.

 

இந்தக் கூண்டின் அடிப்பகுதி, கம்பி வலையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறந்து ஒரு நாளேயான கோழிக் குஞ்சுகளை வாங்கி, அவற்றை ஒரு அறையில் வைத்து 12 நாட்களுக்கு வளர்க்க வேண்டும். பின்பு ஒரு கூண்டுக்கு 20 கோழிகள் வீதம் வளர்க்க வேண்டும். இந்தக் கோழிகளின் கழிவு, மீனுக்கு உணவாவதுடன் வயலுக்கும் நல்ல உரமாக அமைகிறது. பொதுவாக, கோழிகளின் கழிவில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், ஒரு கூண்டுக்கு 20 கோழிகளுக்கு மேல் வளர்க்கக் கூடாது. ஒரு ஏக்கருக்கு 20 கூண்டுகள் வரை வைக்கலாம்.

Courtesy: Hindu

குறுவை சாகுபடியின்போது இரண்டு முறையும், சம்பா சாகுபடியின்போது மூன்று முறையும் என இந்த மீன்களையும் கோழிகளையும் வளர்க்க முடியும். மீன்கள் 15 முதல் 20 கிலோ வரையும், 45 நாட்களில் வளர்ந்துவிடும் கோழிகள் சுமார் 2 கிலோவரை இருக்கும். இவற்றைச் சந்தை மதிப்புக்கேற்ற விலையிலேயே விற்கலாம்” என்கிறார் கதிரேசன்.

சார்க் நாடுகளுக்கு வழிகாட்டி

அனைத்து வகையான நெல் ரகங்களுக்கும் இந்த வேளாண் முறை பொருந்தும். ஊட்டச்சத்து, பொருளாதார லாபம், வேலைவாய்ப்பின்மையைப் போக்கும் இந்த வேளாண் முறைக்கு தேசிய, சர்வதேச அளவில் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. இந்த விவசாய முறையை நேபாளம் உள்ளிட்ட சார்க் நாடுகள் பின்பற்றப்படவுள்ளன. அதன் தொடக்க விழா கடந்த 8-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தற்போது, கடலூர் மாவட்டத்தின் ஐந்து கிராமங்களில் இந்த விவசாய முறை நடைமுறையில் உள்ளது.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *