மலை உச்சியிலும் இயற்கை வேளாண்மை

மாட்டுச்சாணம், சாம்பல் ஆகியவற்றையே பிரதான உரமாக பயன்படுத்தி, இயற்கை வேளாண் சாகுபடியில் சாதனை படைக்கின்றனர், வால்பாறை அருகே உள்ள வாகமலை விவசாயிகள்.கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்திலுள்ள வால்பாறைக்கு அழகு, அதனை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள்.வால்பாறையில் 80 சதவீதம் தேயிலை தோட்டம், 10 சதவீதம் காபி தோட்டம், மீதமுள்ள 10 சதவீத பரப்பில் மிளகு, ஏலம் சாகுபடி உள்ளது.

தேயிலை தோட்ட வேலை நேரம் போக, மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக்கி, ரசாயன விவசாயத்துக்கு எதிராக, வெற்றிக்கொடி பறக்கவிட்டுள்ளனர் வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள்

மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட, வால்பாறை – முடீஸ் வழித்தடத்தில், ஹைபாரஸ்ட் அருகிலுள்ளது வாகமலை எஸ்டேட். அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்களின் 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர்;

தங்கள் குடியிருப்பு அருகில், மழை நீர் வடிந்து செல்லும் ஓடை அருகே, காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர். ஆண்டில், ஆறு மாதம் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். மீதமுள்ள ஆறு மாதங்கள் புதர் மண்டி கிடக்கும் இடத்தை, சுத்தம் செய்து, விவசாயத்துக்கு ஏற்ற இடமாக்கியுள்ளனர் நாகமலை விவசாயிகள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து, தேயிலை தோட்ட வேலைக்காக, 80 ஆண்டுகளுக்கு முன், வாகமலைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வந்தனர்.

இப்போது இரண்டு தலைமுறையாக, இயற்கை விவசாயத்தில் கால்பதித்துள்ளனர்.

மலைப்பிரதேசத்தில், இங்கிலீஷ் காய்கறி தான் விளைவிக்க முடியுமா? நம்ம ஊரில், வீட்டு தோட்டத்தில் விளைவிக்கும் அனைத்து காய்கறி, கீரை வகைகளையும் செழிப்பாக வளர்க்க முடியுமென நிரூபித்துள்ளனர்.

மழைநீர் மட்டுமே பாய்ந்தோடும் மண், மனித காலடி படாத இடம், ரசாயன கலப்பு இல்லாத இயற்கை விவசாயம். காய்கறிகளுக்கு இவைகள் மேலும் சுவையூட்டுகின்றன.

இயற்கை விவசாயம்:

  • வாகமலை விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும், அதிக ஆர்வம் கொண்டதால், வீட்டுக்கு ஒரு மாடு வளர்க்கின்றனர்.
  • ஓடை பகுதிகளில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பசும்புல்லை நம்பி, மாடு வளர்க்கின்றனர்.
  • அவற்றின் சாணத்தை குவியலாக சேர்த்து, மட்க வைக்கின்றனர்.
  • மழை காலம் முடிந்து, வெயில் காலம் துவங்கியதும், நிலத்தை விவசாயத்துக்கு தயார்படுத்துகின்றனர்.
  • அப்போது உலர வைக்கப்பட்ட, மாட்டுச்சாணத்தை மண் மீது தூவி, கலக்குகின்றனர்.
  • காய்கறி தோட்டத்துக்கு, இதை தவிர, வேறு எதையும் இடு பொருளாக சேர்ப்பதில்லை.

மண் வெட்டியே துணை:

  • பாதங்களை வேகமாக ஊன்றினால், தண்ணீர் ஊற்றெடுக்கும் பகுதியில் தான் இவர்களின் விவசாயம் நடக்கிறது.
  • நிலத்தடி நீர் கசியும் அளவுக்கு இருந்தாலும், தோட்டத்தில் ஒரு மூலையில் குழி தோண்டியுள்ளனர்.
  • அதில் ஊற்றெடுத்து தேங்கும் நீரை, பூவாளியில் எடுத்து, மண் உலரும் போது தெளித்து, விவசாயம் செய்கின்றனர்.
  • நிலத்தை தயார்படுத்த மாடுகளை பூட்டி உழவு செய்யும் வசதி அங்கு இல்லை. மண் வெட்டியால் நிலத்தை கிளறி, சமப்படுத்துகின்றனர்.

தொடர்புக்கு: ராமர்பாண்டி கூறியது… 09489182102,  வாகமலை விவசாயி அய்யாதுரை 09443934117

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *