விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி!

3 ஏக்கர்… 130 நாள்கள்… ரூ.1,60,000 வருமானம்… விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி!

“சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம். படிச்சுட்டு ஐ.டி கம்பெனியில வேலை பார்த்தாலும் மனசு முழுக்க விவசாய ஆசை இருந்துச்சு. அந்த ஆசைதான் லட்சியமா மாறி என்னை வெற்றிகரமான இயற்கை விவசாயியா மாத்தியிருக்கு” என்று சொல்கிறார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார்.

விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில்தான் சுரேஷ்குமாரின் தோட்டம் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமாரைச் சந்தித்தோம்.

“பரம்பரை விவசாயக் குடும்பத்துல பிறந்தவன் நான். எங்களோட குடும்பத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்துல அப்பா விவசாயம் பார்த்துக்கிட்டுருந்தார். அதுல கிடைச்ச வருமானத்தை வெச்சு 30 ஏக்கர் நிலம் வாங்கினோம். நான் சின்ன வயசுல இருந்தே அப்பாவுக்கு விவசாயத்துல உதவியா இருப்பேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு பெங்களூருல வேலை பார்த்துட்டுருக்கேன்.

அப்படியே விவசாயத்தையும் செஞ்சுட்டுருக்கேன். விடுமுறை கிடைச்சா உடனே கிளம்பித் தோட்டத்துக்கு வந்துடுவேன். அப்பா ரசாயன உரங்களைப் போட்டுதான் விவசாயம் செஞ்சார். நான், விவசாயம் செய்யலாம்னு ஆரம்பிச்சவே ‘இயற்கை விவசாயம்தான்’னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு எனக்கு வழிகாட்டினது ‘பசுமை விகடன்’ புத்தகம்தான். இயற்கை விவசாயம் சார்ந்த நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கேன். அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் எனக்கு உதவியா இருக்கு.

2013-ம் வருஷம், ‘நாலு ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்யலாம்னு இருக்கேன்’னு வீட்டுல சொன்னேன். ‘பெங்களூருல இருந்துக்கிட்டு விவசாயம் செய்றதெல்லாம் சாத்தியமில்லை. இது உனக்கு வேண்டாத வேலை’னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஒருவழியா பேசிச் சம்மதிக்க வெச்சப்பிறகு, 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தாங்க. சில இயற்கை விவசாயிகள்கிட்ட ஆலோசனை கேட்டதுல… பசுந்தாள் உர விதைப்பு, பஞ்சகவ்யா பயன்படுத்துறது, உயிர் உரங்களைப் பயன்படுத்துறது பத்தியெல்லாம் சொன்னாங்க. அவங்க சொன்ன விஷயங்கள், பசுமை விகடன்ல படிச்ச விஷயங்கள், இயற்கை விவசாயக்கருத்தரங்குகள்ல தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்னு எல்லாத்தையும் நடைமுறைப்படுத்தி இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன சுரேஷ்குமார் தொடர்ந்தார்…

“ஆத்தூர் கிச்சலிச் சம்பா, சேலம் சன்னா, மாப்பிள்ளைச் சம்பா, சொர்ணமசூரினு நாலு விதமான பராம்பர்ய நெல் ரகங்களை விதைச்சதுல நல்ல மகசூல் கிடைச்சது. அடுத்து பயிர்சுழற்சி முறையைச் செயல்படுத்தணும்னு… நெல்லுக்கப்புறம்  நிலக்கடலை, பயறு வகைகள்னு பயிர்களை மாத்திக்கிட்டேன். இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்ச சமயத்துல வேலை அதிகமா இருந்துச்சு. நிலம் இயற்கைக்கு மாறினதும் வேலை குறைஞ்சுடுச்சு. பட்டம் பார்த்துப் பயிர் பண்ணுனா நிச்சயம் நல்ல மகசூல் எடுக்கலாம். இப்போ 10 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். இதுல 3 ஏக்கர் நிலத்துல அறுபதாம் குறுவை ரக நெல் போட்டுருக்கேன். 1 ஏக்கர் நிலத்துல கருங்குறுவை ரக நெல் போட்டுருக்கேன். 3 ஏக்கர் நிலத்துல ஏ.எஸ்.டி-16 (அம்பை-16) ரக நெல் போட்டு அறுவடை பண்ணிட்டேன். 3 ஏக்கர் நிலத்தை உழுது தயார் செஞ்சு வெச்சுருக்கேன்” என்ற சுரேஷ்குமார் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மூணு ஏக்கர் நிலத்துல ஏ.எஸ்.டி-16 ரக நெல் போட்டதுல மொத்தமா 84 மூட்டை நெல் கிடைச்சுருக்கு. இதை அரிசியாக்கி விற்பனை செய்யலாம்னு இருக்கேன். 84 மூட்டை நெல்லை அரிசியா அரைச்சா 45 மூட்டை (ஒரு மூட்டை 75 கிலோ) அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இதுக்கு முன்னாடி இந்த விலையிலதான் விற்பனை செஞ்சுருக்கேன். மொத்தம் 3,375 கிலோ அரிசியைக் கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சா… 1,68,750 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதுல உழவுல இருந்து அரிசியா அரைக்கிறது வரை 66,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக, 1,02,750 ரூபாய் லாபமாக நிக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்ற சுரேஷ்குமார் நிறைவாக

ஒற்றை நாற்று நடவு

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் ஏ.எஸ்.டி-16 (அம்பை-16) ரக நெல் சாகுபடி செய்வது குறித்துச் சுரேஷ்குமார் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

5 சென்ட் நிலத்தை உழுது மண்ணைப் பொலபொலப்பாக்கி தண்ணீர் கட்டி நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். 30 லிட்டர் தண்ணீரில் 900 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, அதில் 2 கிலோ விதைநெல்லைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊறவைக்கப்பட்ட நெல்லில் தண்ணீரை வடித்து ஒரு சணல் சாக்கில் போட்டுக் கட்டி 12 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு நெல்லைத் தரையில் கொட்டிப்பரப்பி உலர வைக்க வேண்டும். 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைச் சிறிது பஞ்சகவ்யாவில் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். விதைப்புக்கு ஒரு மணி நேரம் முன்பு இந்தக்கரைசலை உலர வைக்கப்பட்ட விதைநெல் மீது தெளித்துச் சற்று உலர வைத்து நாற்றங்காலில் தூவி விதைக்க வேண்டும். தொடர்ந்து பூவாளி மூலம் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

விதைத்த 8-ம் நாள் முளைவிட ஆரம்பிக்கும். அதன் பிறகு 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 15 முதல் 20 நாள்களுக்குள் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டு டன் தொழுவுரத்தைக் கொட்டி நன்கு உழவு செய்து, மண்ணை மட்டப்படுத்த வேண்டும். பிறகு தண்ணீர் கட்டி எருக்கன், வேம்பு போன்ற இலைதழைகளை வயல் முழுவதும் போட்டுப் பரப்பி 5 நாள்கள் மட்கவிட வேண்டும். பிறகு அவற்றைக் காலால் மிதித்து விட வேண்டும். பிறகு வயலைச் சேறாக்கி ‘ஒற்றை நாற்று நடவு முறை’யில் முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

நாற்றை நடவு செய்யும்முன், பஞ்சகவ்யா கரைசலில் நாற்றுகளை மூழ்க வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுக்க வேண்டும். நடவு செய்த 15-ம் நாள் பாசன நீருடன் 200 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 25 மற்றும் 40-ம் நாள்களில் களைகளை அகற்ற வேண்டும் 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து பயிர்கள் வாடினால் அமுதக்கரைசலையும் பஞ்சகவ்யாவையும் கொடுத்தால் போதுமானது. பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப் பூட்டிவிரட்டி தெளிக்கலாம். 130-ம் நாளுக்கு மேல் கதிர்கள் முற்றி அறுவடைக்கு வந்துவிடும்.

“என்னமோ இயற்கை விவசாயம் பண்ணப்போறானாம்… ஏசி ரூம்ல உட்காந்து வேலை பாக்குறவங்கள்லாம் விவசாயம் செஞ்சு ஜெயிக்க முடியுமானு என்னைக் கிண்டல் செஞ்ச விவசாயிகள் எல்லாம், என்னையும் என் பயிரையும் ஆச்சர்யமாப் பார்க்குறாங்க. சிலபேர் என்கிட்ட ஆலோசனை கேட்டும் வர ஆரம்பிச்சுருக்காங்க. இங்க பத்து பேரையாவது இயற்கை விவசாயத்துக்கு மாத்தணுங்கிறது என்னோட ஆசை. சீக்கிரம் அந்த ஆசையை நிறைவேத்திட்டு உங்களைக் கூப்பிடுறேன். கட்டாயம் அவங்களைப் பத்தியும் பசுமை விகடன்ல எழுதணும்” என்று வேண்டுகோள் வைத்தார். சுரேஷ்குமாரின் கைகளைக் குலுக்கி நமது வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு,
சுரேஷ்குமார்,
செல்போன்: 9449617689 .

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *