எள் பயிரில் நோய் மேலாண்மை

 வேரழுகல் நோயின் அறிகுறிகள்
இலைகள் வாடி, பின் செடிகளும் காயத் தொடங்கும். நோய் தாக்கிய செடியை மெதுவாக இழுத்தால் கூட கையோடு வந்து விடும். செடியின் தண்டுப்பாகத்தில் தரை மட்டத்தை ஒட்டி கருப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்.
புள்ளிகள் இணைந்து தண்டு மற்றும் வேர் பாகங்கள் நிறமாற்ற மாகிவிடும். வேர்ப்பகுதியில் பட்டைகள் உரிந்து சல்லி வேர்கள் சிதைந்து மக்கிவிடும். செடியின் வேர் மற்றும் தண்டுப்பகுதியில் கருமை நிற கடுகு வடிவில் பூசண வித்துக்கள் காணப்படும்.

Courtesy: Dinamalar

நோய் நிர்வாகம்:

வயலில் விட்டுப்போன நோய் தாக்கிய செடிகளை அகற்றி எரிக்க வேண்டும். நெல், கரும்பு போன்றவற்றைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யலாம். ‘டிரைக்கோடெர்மா விரிடி’ நான்கு கிராம் அல்லது ‘சூடோமோனாஸ் புளுரோசன்ஸ்’ பத்து கிராம் அல்லது ‘கார்பன்டாசிம்’ இரண்டு கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
‘கார்பன்டாசிம்’ ஒரு கிராம் மருந்து அல்லது ‘தையோ பினையிட் மீதை’ ஒரு கிராம் மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியின் வேரை சுற்றி ஊற்ற வேண்டும். நிலத்தில் ஈரம் உலர்ந்து விடாமல் அடிக்கடி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

வாடல் நோய் அறிகுறிகள்
நோயின் ஆரம்ப நிலையில் இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர ஆரம்பிக்கும். தாக்குதலால் மெதுவாக நோயின் தீவிரம் அதிகமாகும்போது பாதிக்கப்பட்ட செடியானது வாட ஆரம்பிக்கும்.

அச்செடியின் வேர்கள் மற்றும் தண்டுப்பகுதியில் கருமை நிறக்கோடுகள் உருவாகி முழுவதும் கருப்பு நிறமாகி விடும்.
நோய் நிர்வாகம்:

விதை நேர்த்தி ‘டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பசுந்தாழ் உரம் அல்லது தொழுஉரம் மண்ணில் இடுவதால் இந்நோயின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ‘டைபென்கோனசால்’ ஒரு மில்லி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியின் வேரை சுற்றி ஊற்ற வேண்டும்.

தண்டு கருகல் நோய்
நோயின் ஆரம்பத்தில் அறிகுறியானது மண்ணில் மேற்பரப்பில் தண்டுப்பகுதியில் கருமை நிற கோடுகள் தோன்றும். மேலும் நோயின் அறிகுறியானது கிளைகளை தாக்கி, தண்டுப்பகுதி முழுவதும் தண்டு கருகல் நோய் தாக்கப்பட்ட பகுதிகள் போன்று காணப்படும். இந்த அறிகுறியானது இலை காயும் வரை பரவிக் கொண்டே இருக்கும். மேலும் நோயின் அறிகுறி பூ மற்றும் காய்களிலும் காணப்படும். தாய் இலையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சுருங்கிய விதைகளை கொண்டிருக்கும்.
நோய் நிர்வாகம்:

கார்பன்டாசிம் என்னும் பூசணக்கொல்லியை 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். தொடர்ச்சியாக ஒரு வயலில் எள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும். மெட்டாலாக்சில் 2 கிராம் ஒரு லிட்டர் அல்லது அலியேட் 1 கிராம் ஒரு லிட்டர் அல்லது மான்டிபிரோபொமீட் ஒரு கிராம் ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்
இந்நோயானது செர்க்கோஸ்போரா சிசாமி என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இந்நோய் குறிப்பாக பயிரிட்ட 30 முதல் 45 நாட்களில் இலைகளை தாக்குகிறது.
அறிகுறிகள்:

இந்நோயின் அறிகுறியானது முதலில் சிறிய புள்ளிகளாக ஆரம்பித்து ஒழுங்கற்ற வடிவத்துடனோ அல்லது வட்ட வடிவத்துடனோ புள்ளிகளாக தோன்றும்.
இலைகளில் சிறிய பழுப்பு நிற 3 மில்லி மீட்டர் விட்டமுடைய புள்ளிகள் சாம்பல் நிறத்தில் நடுவிலும், சுற்றி மஞ்சள் நிற வளையமும் காணப்படும். பின் புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து இலைகள் முழுவதும் பரவி நோயின் தாக்கம் அதிகமாகி இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.
நோய் நிர்வாகம்:

நோய் தாக்கப்படாத தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு திறனுள்ள ரகங்களான ‘டி.கே.ஜி.-21’ பயிரிடலாம்.
நோய் தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை நிலத்தில் தங்கவிடாமல் எரித்து விட வேண்டும். உயிரியல் நோய்க் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பயிரில் நோய் ஆரம்பித்தவுடன் மான்கோசெப் 2 கிராம் ஒரு லிட்டர் அல்லது மைகோபூட்டனில் 1 கிராம் ஒரு லிட்டர் அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் ஒரு கிராம் ஒரு லிட்டர் என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்கலாம். நோயின் தீவிரத்தை பொறுத்து 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல் நோய்
இந்நோய் அதிக மழை மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அதிகமாக காணப்படும். ஆல்டர்னேரியா சிசாமி என்ற பூசண வகையினால் இந்நோய் உண்டாகிறது. நோயின் அறிகுறிகள் செடியின் அனைத்து பகுதிகளிலும் தென்படும்.
அதாவது இலை, இலைக்காம்பு, தண்டுப்பகுதிகளிலும் ஏற்படும். ஆரம்ப நிலையில் சிறிய பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் மேல் அடுக்கடுக்காக ஒன்றின் மேல் ஒன்றான வளையங்கள் உண்டாகும்.
பின் ஒன்றோடொன்று இணைந்து இலையின் முழுப் பகுதியும் காய்ந்து உதிர்ந்து விடும். நோயின் தாக்குதல் தீவிரமாகும்போது நீரில் ஊறிய அடர் பழுப்பு நிறமான கோடுகள் தண்டு, கணுப்பகுதி மற்றும் காய்களின் மேல் தோன்றும். பாதிக்கப்பட்ட காய்களானது விதை நிரம்பாமல் காய் இலப்பு குறைகிறது. மேலும் அதிக இலையுதிர்தல் மற்றும் தண்டுப்பகுதி பாதிப்பினால் செடிகள் வலுவிழந்து காய்ந்து போய்விடும்.
நோய் நிர்வாகம்:

இந்நோய் வராமல் தடுக்க ஒரு கிலோ விதைக்கு கார்பன்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட உதிர்ந்த இலைகளை எடுத்து எரித்து விட வேண்டும்.
வளரும் பருவத்தில் தாமிர ஆக்சிகுளோரைடு ஒரு லிட்டர் தண்ணீர் 2.5 கிராம் அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் ஒரு கிராம் ஒரு லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
த.வளர்மதி
வேளாண் துணை இயக்குனர் (பொறுப்பு)
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *