குறைந்த முதலீட்டில் பீர்க்கங்காய் பயிரிட்டு, ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என தோட்ட கலைத்துறை தெரிவித்துள்ளது.
காய் வகைகளில் அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணுவது பீர்க்கங்காய். கொடி வகையான இந்தப் பயிரின் வளர்ச்சிக்கு பந்தல் அமைப்பது அவசியமாகும்.
இதை லாபகரமான முறையில் பயிர் செய்வது எப்படி என்பது குறித்து திருவள்ளூர் மாவட்டத் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் தெரிவித்த யோசனைகள்:
மண், தட்பவெப்ப நிலை:
- பொதுவாக மண் பாங்கான தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளும் ஏற்றதாகும். இந்தப் பயிரை கோடை, மழைக் காலங்களிலும் சாகுபடி செய்யலாம்.
- கோடைக் காலங்களில் வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸýக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பருவம்:
- இந்தப் பயிருக்கு ஜூன், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் பருவ காலமாக உள்ளது.
நிலம் தயார்படுத்துதல்:
- நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது 2.5 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை எடுத்து நிலத்தை தயார்படுத்த வேண்டும்.
- பின்பு வாய்க்காலில் 45 செ.மீ. ஆழம், அகலம், நீளமுள்ள குழிகளை 1.5 செ.மீ. இடைவெளியில் எடுத்து, அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன், 100 கிராம் கலப்பு உப்பு கலந்து மேல் மண்ணுடன் சேர்த்து இட்டு நடவுக் குழு தயார் செய்ய வேண்டும்.
விதையளவு:
- ஒரு ஹெக்டேருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும். ஒரு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும். முளைத்தவுடன் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டு மற்ற செடிகளைப் பிடுங்கி எடுக்க வேண்டும்.
பின் செய் நேர்த்தி:
- விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- நாற்றுகள் வளர்ந்த உடன், வாய்க்கால் மூலம் 7 முதல் 10 நாள்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படர விட வேண்டும். எத்ரல் எனும் வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் என்ற அளவில் இரண்டு இலைப் பருவத்தில் தெளிப்பதால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மீண்டும் 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
- விதை ஊன்றிய 30 நாள் கழித்து 50 கிலோ யூரியாவை களை எடுத்து மேலுரமாக இட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு:
- பூசணி வண்டு தாக்குதலை 2 கிராம் கார்பரைல் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து, கட்டுப்படுத்தலாம். பழ ஈயை கட்டுப்படுத்த கருவாட்டுப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 0.1 சதவீத பெவிஸ்டின் மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அறுவடை, மகசூல்:
- முதல் அறுவடை விதை ஊன்றிய 50 முதல் 60 நாள்கள் கழித்து மகசூல் பெறலாம்.
அதைத் தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் 10 முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். - விவசாயிகள் இந்த முறையைக் கடைப்பிடித்தால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று பயனடையலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thanks for the information sir… I am going to make my land for the agri… I am form poachi