நாட்டுக் கோழி வளர்த்தால் நல்ல லாபம்!

வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் என்று திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் ஆலோசனை கூறியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன.

மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

நாட்டுக் கோழிகளின் வகைகள்:

கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாத போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.

இனப் பெருக்கம்:

நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.

முட்டையிடுதல்:

முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சப்தத்தை எழுப்பும். அதை கேவுதல் என கூறுவர்.

கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.

ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொறிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

அடை கட்டுதல்:

நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.

அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.

கோழி குஞ்சி பொறிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.

அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொறிக்கும்.

பராமரிப்பு:

நாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.

தீவனம்:

ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.

நோய்த் தடுப்பு:

நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.

தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. இந்த முறையில் நாட்டுக் கோழிகளைப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடியே முட்டைகளை சந்தைப்படுத்தியும், கோழிகளை விற்றும் பயன்பெறலாம் என திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் கூறியுள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *