பிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்

சாதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்று நம்மில் யாரும் கண்டுகொள்வதில்லை.

இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப் போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம்! கடல் நீரில் உள்ள மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதனால் புவியின் ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமே மாற்றத்திற்கு உள்ளாகும் எனக் கூறப்பட்டு வருகிறது.

  • வருடத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் கடலில் கலக்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 7 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள்.
  • தற்போது 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்துள்ளன. இது 25 கோடி டன் ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • இன்னும் சில வருடங்களில் கடலில் இருக்கும் மீன்களின் அளவை விட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள்தான் பிளாஸ்டிக்கை அதிக அளவு கடலில் கலக்கின்றன.
  • பிளாஸ்டிக் கழிவு அதிகம் கலக்கப்படுவதால் கடலில் வாழும் உயிரினங்கள் அதை தின்று விடுகின்றன. இதனால் அந்த உயிரினங்களில் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது
  • தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வையும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளையும் டிஜிட்டல் தட்டிகளுக்கு பதிலாக சணலினால் ஆன தட்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
  • கடந்த 50 வருடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது 20 முறை அதிகரித்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
  • இந்தியாவில் 20 மைக்ரான் எடை மற்றும் 8க்கு 12 அங்குலத்திற்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் தற்போது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்க பயன்படுத்தி வருகின்றனர்.
  • இந்தியா முழுவதும் 60 முக்கியமான நகரங்களில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3501 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது.
  • சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பை உருவாகிறது. இதில் 7 சதவீதம் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகள்.
  • 2013-14ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.
  • பிளாஸ்டிக் பைகளை குப்பைகளுடன் சேர்த்து மண்ணில் புதைப்பதால் நீண்ட காலத்துக்கு மண்ணில் மக்கி போகாமல் இருக்கும். இது மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
  • பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் பாலி எத்திலின் என்ற துணை பொருளை கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளைக் தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு எரிபொருள் அதிகமாக காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் இருவிதமான பைகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
  • சர்வதேச அளவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *