விவசாயிகள் நடவு முறையில் துவரை விளைச்சலை அதிகரிக்க திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் க.செல்வராஜ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.விவசாயிகள் சரியான முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க, நடவு முறை துவரை சாகுபடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றதாகும்.

- ஏக்கருக்கு தேவையான ஒரு கிலோ விதையினைக் கொண்டு, பாலீதின் பைகளில் பராமரிக்கப்பட்டுள்ள 30 முதல் 40 நாள்கள் வயதுடைய துவரை நாற்றுகளை நடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு இள வெயிலில் வைத்து கடினப்படுத்தி பின்பு நடவுசெய்ய வேண்டும்.
- ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தினை இட்டு சமன்படுத்திய நடவு வயலில் அரை அடி (15 சதுர செ.மீ) அளவுள்ள குழிகளை 5-க்கு 3 அடி இடைவெளியில் எடுக்க வேண்டும். நாற்றுகளை நடவு செய்வதற்கு 15 நாள்களுக்கு முன்பு குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும்.
- பின்னர் ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும். ஊடு பயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன்பு உளுந்து, பாசிப் பயிறு, மொச்சை போன்ற விதைகளை விதைத்து, பிறகு துவரை நாற்றுகள் நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்த 20 முதல் 30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர், 17 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை இடவேண்டும்.
- மேலும் 4 கிலோ சிங்சல்பேட் உரத்தை செடியை சுற்றி இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும். பக்கக் கிளைகளை அதிகரித்து மகசூலை அதிகரிக்க, நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் 5 செ.மீ. அளவுக்கு நுனிக் குருத்தை கிள்ளிவிட வேண்டும்.
- நடவு முறை துவரை சாகுபடி செய்யும் விவசாயிக்கு மானிய விலையில் இடு பொருள்கள் மற்றும் ஊக்கத்தொகை, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐயா கலப்படம் இல்லாத துவரை விதைகள் தமிழகத்தில் எங்கு கிடைக்கும் திருவண்ணாமலையில் கிடைக்குமா