கருந்தலை புழுவை கட்டுப்படுத்தும் 'டெக்னீஸ்' ஒட்டுண்ணி பூச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் உள்ள தென்னை மரங்களில் கருந்தலை புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் “டெக்னீஸ்’ என்ற ஒட்டுண்ணி பூச்சி விடப்பட்டுள்ளது.

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 12,000 ஹெக்டேரில் 16 லட்சம் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், திம்மாபுரம், பெரியமுத்தூர், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், அகரம், மருதேரி, பாரூர், அரசம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் கருந்தலை புழுக்களின் தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளது.

கருந்தலை புழுக்கள் வழக்கமாக பிப்ரவரியில் இருந்து மே வரை அதிக அளவில் தென்னையை தாக்கும்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.புழுக்கள் தாக்கிய மரங்களில் உள்ள ஓலைகள் சிதைந்து காணப்படுகிறது.

புழுக்களின் தாக்குதல் அதிகரிக்கும் போது அடிஓலையில் இருந்து குருத்து ஓலை வரை காய்ந்து மரங்கள் பட்டுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெடுங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தாக்குதல் அதிரிகத்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜமாணிக்கம், பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மணி வேளாண் இணை இயக்குனர் ராஜன், வேளாண்மை அலுவலர் பச்சையப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் நெடுங்கல் பகுதியில் உள்ள தென்னை மரங்களில் கருந்தலை புழுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் “டெக்னீஸ்’ என்ற ஒட்டுண்ணியை விடும் மேலாண்மை தொழில் நுட்பங்கள் செய்து வருகின்றனர்.இது குறித்து ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜமாணிக்கம் கூறியது:

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்னையில் ஏற்கெனவே ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் கருந்தலை புழுக்களின் தாக்குதலும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.
  • நோய் தாக்கிய மரங்களில் டெக்னீஸ் என்ற ஒட்டுண்ணியை விவசாயிகள் விட வேண்டும்.
  • இந்த வகை ஒட்டுண்ணி கருந்தலை புழுக்களின் முட்டைகளின் மேல் இனப்பெருக்கம் செய்வதால் கருந்தலைபுழுக்களின் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படுகிறது.
  • ஒரு ஏக்கரில் உள்ள தென்னை மரங்களில் 21 பாக்கெட் “டெக்னீஸ்’ பூச்சிகளை விவசாயிகள் விட வேண்டும்.
  • ஒரு பாக்கெட்டில் 100 பூச்சிகள் இருக்கும். ஒரு பாக்கெட் பூச்சியின் விலை 50 ரூபாயாகும்.
  • ஒட்டுண்ணி பூச்சிகளை பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அனுகலாம்.
  • தென்பெண்ணை ஆற்றில் வரும் பெங்களூரு சாக்கடை நீரை தென்னை மரத்துக்கு பாய்சுவதால் கருந்தலை புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
  • நோய் தாக்குதல் குறையும் வரை அந்த தண்ணீரை தென்னை மரங்களுக்கு பாய்ச்ச கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கருந்தலை புழுவை கட்டுப்படுத்தும் 'டெக்னீஸ்' ஒட்டுண்ணி பூச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *