பம்மல்:பம்மலை சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாக, தங்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, பயனுள்ளதாக மாற்றி, செடிகளுக்கு பாய்ச்சுவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஐந்து முதல் 10 பேர் உள்ள வீடுகளில், நாள்தோறும், 500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், குடிக்க, சமைக்க ஆகும் தேவைகளுக்கு, 10 முதல் 25 லிட்டர் செலவாகிறது.
மீதமுள்ள, 475 லிட்டர் கழிவுநீராக, மழைநீர் கால்வாய்களில் கலக்கிறது. இது தான், கொசு உற்பத்திக்கு முக்கிய காரணமாக அமைகிறது.பொதுவாக, மழைநீர் கால்வாய்களில், கழிவுநீர் கலந்தால் கொசு உற்பத்தியாகும். அதுவே, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கலந்தால், நண்டு, தவளை, மீன் உள்ளிட்டவை வாழும்; கொசு வாழாது.
ஒவ்வொரு வீட்டில் இருந்தும், சமையலறை, குளியலறை, கழிப்பறை என, மூன்று வகையான, கழிவுநீர் வெளியேறுகிறது. இதில், அதிக ஆபத்தானது என்றால், குளியலறை கழிவுநீர் தான். இதை கருத்தில் வைத்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, அவற்றை செடிகளுக்கு பாய்ச்சி, அசத்தி வருகிறார், பம்மலைச் சேர்ந்த, ‘ஹோம் எக்ஸ்னோரா’ தலைவர் எஸ்.இந்திரகுமார், 69.தன் வீட்டில், இதை செயல்படுத்தி வருவதோடு, இது சம்பந்தமாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்.
இதேபோல், பலரும், தங்களது வீட்டு கழிவுநீரை சுத்திகரித்து, தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சி, இந்திரகுமாரின் விழிப்புணர்வுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, எஸ்.இந்திரகுமார் கூறியதாவது:குளியலறை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, காட்டு சேம்பு, கல்வாழை செடிகள் போதும். இந்த செடிகளை நட்டு, அதில், கழிவுநீரை விட்டால், அது வெளியே வரும்போது, சுத்தமான தண்ணீராக வரும்.இந்த ஆராய்ச்சியை, சுல்தான் அகமது இஸ்மாயில் என்பவர், குரோம்பேட்டையில் தான் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையலறை கழிவுநீரை, செடிகளுக்கு நேரடியாக பாய்ச்சலாம். கழிப்பறை கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்ய, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும், ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பாக்டீரியாவை பயன்படுத்துகிறோம். இந்த பாக்டீரியா, குதிரை சாணத்தில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாக்டீரியாவை, 100 கிராம் எடுத்து, கழிப்பறையில் கொட்டி, தண்ணீர் ஊற்ற வேண்டும்.
நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கழித்து, ‘செப்டிக் டேங்’கை திறந்து பார்த்தால், சுத்தமாக இருக்கும்; நாற்றம் அடிக்காது.அதேநேரத்தில், பாக்டீரியா கொட்டிய பின், கழிப்பறையில் இருந்து வரும் துர்நாற்றமும் நின்றுவிடும்.அதன்பின், ‘செப்டிக் டேங்க்’ தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து, செடிகளுக்கு பாய்ச்சலாம்.பல ஆண்டுகளாக, இதை செயல்படுத்தி வருகிறேன். செடிகளுக்கு பயன்படுத்தவில்லை எனில், மழைநீர் கால்வாயில் விடலாம்.
இப்படி செய்வதால், ‘செப்டிக் டேங்க்’ லாரிகளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. அதேநேரத்தில், காற்று மாசு குறையும். கரப்பான் பூச்சி வராது.கழிப்பறை ஆரோக்கியமாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம். இது சம்பந்தமாக, இதுவரை, 10 லட்சம் பேருக்கு, வகுப்பு எடுத்துள்ளேன். பலரும் இதை பின்பற்றி வருவது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர், 99410 07057 என்ற மொபைல் எண்ணில், இரவு, 7:00 முதல் 9:00 மணி வரை, தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்