டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தில் மடுப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. அப்படிப் பயிரிடப்பட்ட ரகம் ஒட்டடையான். பசுமைப்புரட்சி காரணமாக இந்நெல் ரகம் உழவரைவிட்டு விலகிவிட்டாலும், காவிரியின் கடைமடை பகுதியில் சில உழவர்கள் சாகுபடி செய்துவருகிறார்கள்.
ஆடி மாதத்தில் விதைத்தால் மழை, வெள்ளம் வந்தாலும் தாங்கிக்கொண்டு ஆறடிவரைப் பயிர் வளரும். பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக நாட்களாக இருநூறு நாள் வயது கொண்டது. ஒட்டடை போன்று அழுக்கு நிறம் கொண்ட மஞ்சள் நெல்லாகவும் கருஞ்சிவப்பு அரிசியாகவும் இருக்கும்.

ஏக்கருக்குக் குறைந்தபட்சம் பதினெட்டு மூட்டை மகசூல் கிடைக்கும். மற்றப் பாரம்பரிய ரகங்களைவிட ஐந்து மடங்கு கூடுதலாக வைக்கோல் கிடைக்கும். நெல் மணி முற்றிய பிறகு சாயும் தன்மை கொண்டது. ஆனால் அறு வடையில் பாதிப்பு ஏற்படுத்தாது.
ஊடு குறுவை சாகுபடி
ஒட்டடையான் நெல் ரகத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. இருநூறு நாள் வயதுடைய ஒட்டடையான் நெல் ரகத்துடன் குறுவை ரகமான பூங்கார், சூரக்குறுவை போன்ற குறுகிய காலப் பாரம்பரிய நெல் ரகங்களைக் கலந்து விதைக்கலாம்.
ஒட்டடையான் பதினைந்து கிலோ, மற்றொரு ரகம் இருபது கிலோ எனக் கலந்து விதைக்க வேண்டும்.
குறுகிய கால நெல் ரகங்கள் அதிகபட்சம் நூற்றி பத்து நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். இதை முன்கூட்டியே அறுவடை செய்துகொள்ளலாம்.
அப்படிச் செய்யும் போது நீண்டகாலப் பயிரில் பாதிப்பு ஏற்படாது. நீண்ட காலப் பயிரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் இந்தச் சாகுபடி முறைக்கு ‘ஊடு குறுவை சாகுபடி’ எனப் பெயர். ஒரே சாகுபடியில் இரட்டை மகசூல்.
எளிமையான பராமரிப்பு
இந்தச் சாகுபடி முறையில் குறுவை ரகம் பதினெட்டு மூட்டையும் ஒட்டடையான் இருபது மூட்டைவரை, ஆக ஏக்கருக்கு இரண்டு ரகமும் முப்பத்தி எட்டு மூட்டை மகசூலைத் தரும். தொழு உரம் அல்லது ஏரி, குளம், குட்டைகளின் வண்டல் படிவமான பொருக்கு களிமண்ணை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏக்கருக்குப் பத்து டிப்பரை பயன்படுத்தினால் போதும்.
ஒட்டடையான் நெல் சாகுபடிக்கு அதிகப் பராமரிப்பு கிடையாது. விதைப்போம், அறுப்போம் என்ற வகையில் சாகுபடி செய்ய முடியும்.
மருத்துவக் குணம்
பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக வயதுடைய நெல் ரகங்கள் மருத்துவக் குணம் நிறைந்திருக்கும். தீராத நோய்கள், உடல் உள்ளுறுப்புகள் தொடர்பான நோய்களுக்கு மாமருந்தாக இருக்கிறது ஒட்டடையான். இதன் அரிசியைக் கஞ்சி வைத்து, ஒரு வேளை குடித்துவந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். நம்மாழ்வார் அடிக்கடி பேசும் கூட்டங்களில் எல்லாம் `மாமருந்தாகும் பாரம்பரிய நெல் ஒட்டடையான்’ எனப் புகழ்ந்து கூறுவார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்