திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை

ஒற்றை நாற்று நடவு முறைக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி விளக்கமளித்துள்ளார்.

நடப்பு ஆண்டு கோடை பருவ சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக மகசூல் பெற  திருந்திய நெல் சாகுபடி முறையை கையாள வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு 14 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருத்தி அமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்துக்கு அருகாமையில் நாற்றங்கால் அமைய வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

ஒரு மீட்டர் அகலமும் 40 மீட்டர் வரை நீளமும், 5 செமீ உயரமும் கொண்ட மேட்டு பாத்திகள் அமைத்து அதன் மேல் பாலித்தீன் உர சாக்குகளை விரிக்க வேண்டும். மரத்தால் ஆன விதைப்பு சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்பு மேல் சரியாக சமன்பட வைக்க வேண்டும். 1 கிலோ வளமான வயல் மண்ணுடன் 1/2 கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்திற்குள் 3/4 அளவிற்கு நிரப்ப வேண்டும். அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ முளை கட்டிய விதையை 0.5 சதுர மீட்டர் சட்டத்திற்குள் 45 கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிட வேண்டும்.

பின்னர் அடிவரை நனையும் அளவிற்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். விதை விதைத்த பின் தென்னை ஓலை அல்லது வைக்கோலை கொண்டு மூடி விட்டு 8 நாள் கழித்து அகற்றி விட வேண்டும். பின்னர் 5 நாட்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின்னர் பாத்திகள் நனையும் வகையில் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத்த 9ம் நாள் 0.5 சதம் யூரியா கரைசல் (150கிராம் யூரியாவிற்கு 30லிட்டர் தண்ணீர் என்ற வீகிதத்தில்) தெளிக்க வேண்டும்.

14வது நாளில் சிறிய சதுர சட்டத்திற்குள் உள்ள 12 முதல் 16 செமீ உயரம் உடைய 2 இலை கொண்ட இளம் நாற்றுகளை வேர் அறுபடாமல் எடுத்து குத்துக்கு 1 நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு 22.5 செமீ இடைவெளியில் சதுர மீட்டருக்கு 20 குத்துக்கள் இருக்குமாறு சதுர முறையில் நடவு செய்ய வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் முறை

  1. kalaiyazhagan says:

    This message followed by all formers(natural techinque ) they are should more income and our land recover from from chemicals

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *