திருந்திய நெல் சாகுபடி சாதனை விவசாயி

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை முழுமையாக பின்பற்றினால், அதிக மகசூல் பெற முடியும், என தமிழக முதல்வரிடம் நெல் சாகுபடியில் சாதனை புரிந்து முதல் பரிசு பெற்ற விவசாயி பெ. சோலமலை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் திருந்திய நெல்சாகுபடி தொடர்பாக முதல்வர் அறிவித்த போட்டியில், 2011-12-ம் ஆண்டில் அதிக மகசூல் எடுத்து முதலிடம் பிடித்த மதுரை மாவட்டம், வெள்ளியங்குன்றம் ஊராட்சி அண்டமான்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் பெ.சோலமலை முதல் பரிசான ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கத்தைப் பெற்றார். அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

 •  எனது 2 ஏக்கர் நிலத்தில் சிஆர் 1009 என்ற நெல் ரகத்தைப் பயிரிட்டேன்.
 •  போட்டிக்காக, 50 சென்ட் நிலத்தை ஒதுக்கி திருந்திய நெல் சாகுபடி முறையில் விவசாய பணிகளை மேற்கொண்டேன்.
 • அலுவலர்கள் யோசனைப்படி, திருந்திய நெல் சாகுபடி முறையில் சதுர முறையில் 14 நாள் நாற்றுநடவு செய்தேன். நடவுக்கு பின் 10ஆவது நாள், 20ஆவது நாள், 30ஆவது நாள், 40ஆவது நாள் “சோனாவிடர்’ என்ற களைஎடுப்பு கருவி மூலம் களை எடுப்பு செய்தேன்.
 • இந்த முறையில் நிலத்தில் எடுக்கப்பட்ட களைகள், அப்படியே நிலத்தில் அழுத்தப்பட்டு உரமாக்கப்பட்டன.
 •  நிலத்தில் ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாகப் போட்டு வந்தேன்.
 • போதிய தண்ணீர் பாய்ச்சி வந்தேன். அவ்வப்போது வேளாண்மை அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து வந்தனர்.
 •  ரசாயன உரங்களை பெரும்பாலும் தவிர்த்தேன். அலுவலர்களின் யோசனைப்படி அவற்றை சிறிதளவு பயன்படுத்தினேன். 150ஆவது நாள் அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது.
 • எனது 50 சென்ட் நிலத்தில் 4,136 கிலோ நெல் அறுவடை ஆனது. அதாவது, ஏக்கர் கணக்கில் 8,272 கிலோவும், ஹெக்டேர் கணக்கில் 20,680 கிலோவும் கணக்கிடப்பட்டது.
 • வழக்கமான சாகுபடியை விட 2 மடங்கு கூடுதல் மகசூல் கிடைத்தது. இதற்கு செலவு தொகை 50 சென்ட் நிலத்தில் சாகுபடிக்கு ரூ.16,500 மட்டுமே ஆனது.
 • வழக்கமான சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரில் பாதியளவு மட்டுமே தேவைப்பட்டது.சாகுபடி நாள் மட்டும் 150 நாள் எடுத்துக்கொண்டேன்.
  போட்டியில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. சாதிக்க வேண்டும்  என்ற ஆர்வத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்ததில் வேளாண்மை அதிகாரிகளின் பங்கும் உள்ளது.
 • என்னைப்போன்று மற்ற விவசாயிகளும், சாதனை புரிவதற்காக மட்டுமின்றி, திருந்திய நெல் சாகுபடி முறையை முழுமையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் கிடைக்கும் என்றார்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *