நெல்லில் கூடுதல் லாபம் தர "பின்செய்நேர்த்தி'

அறுவடை செய்த நெல்லை செய்நேர்த்தி செய்து விற்பதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

நெல்லுக்குக் கூடுதல் விலையைப் பெற்றுத் தருவது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில் தான்.  பின்செய்நேர்த்தி செய்வதன் மூலம் நெல் அரவையின் போது 62 சதவீத அரிசி கிடைக்கிறது.  

அறுவடைக் காலம்

 • நெல் ரகங்களின் வயதுக்கேற்றவாறு அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
 • கதிரில் நெல்மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறியிருந்தாலே போதுமானது.  இதனால் மணிகள் உதிர்வதைத் தடுக்கலாம்.
 • அறுவடையின் போது 19 முதல் 23 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்க வேண்டும்.
 • உதிர்ந்த நெல்மணிகளின் அரிசி கடுமையானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும்.

 காய வைத்தல்

 • அறுவடை செய்த நெல்லை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
 • அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காயவைக்கக் கூடாது.
 • காயவைத்த நெல்லில் ஈரப்பதம் 12 சதத்துக்குள் இருக்க வேண்டும்.
 • அதிக ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துகள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படும்.
 • மூட்டைகளை அடுக்கி வைத்தல்  நெல்லை சுத்தமான சாக்குப்பைகளில் நிரப்ப வேண்டும்.
 • தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
 • நெல் மூட்டைகளை சுவரில் இருந்து ஒரு அடி இடைவெளிவிட்டு அடுக்கி வைத்தால் சுவரின் ஈரப்பதம் நெல்மணிகளைத் தாக்காது.
 • மருந்து தெளித்தல்  சேமித்து வைத்துள்ள நெல்லில் அந்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி என்கிற அளவில் கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளிக்க வேண்டும்.

 தரம் பிரித்தல்  

 • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வணிகமுறை தரப்பிரிப்பு மையங்களில் நெல்மணிகள் நான்கு ரகங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
 • எனவே விற்பனைக்கு நெல்லைக்கொண்டு செல்லும்போது தர வாரியாகக் கொண்டுசெல்ல வேண்டும்.
 • பூச்சிகள் மற்றும் பூஞ்சாணத்தால் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன் நெல்லை தனியாக பிரித்து விட வேண்டும்.

மேலே சொன்ன முறைகளை பின்பற்றி நெல் விற்பனையில் கூடுதல் வருவாய் பெறலாம் என வேலூர் மாவட்ட வேளாண் வணிகப் பிரிவு அலுவலர் கோ.சோமு தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *