வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது, பறவைகளின் புகலிடமான வேடந்தாங்கலில் சீசனும் தொடங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் மாதம்வரை வேடந்தாங்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 13 பறவை சரணாலயங்களுக்கு வலசைப் பறவைகள் (Migratory birds) வருகை தருகின்றன.
பருவமழை பெய்யத் தொடங்குவதை ஒட்டி உள்நாட்டு, வெளிநாட்டு வலசை பறவைகள் இந்த இடங்களில் கூடத் தொடங்குகின்றன. இப்பகுதிகளில் பறவைகளுக்குத் தேவையான உணவு பெருமளவு கிடைக்கும். அத்துடன் உள்நாட்டு நீர்ப்பறவைகளில் பல, இந்த இடங்களில் கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன.
வெளிநாட்டு வலசைப் பறவைகள் என்பவை இந்தியாவைத் தவிர்த்த நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு நம் நாட்டுக்கு இடம்பெயர்பவை. உள்நாட்டு வலசைப் பறவைகள் என்பவை உள்நாட்டுக்குள்ளேயே குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இடம்பெயர்பவை. இந்த வலசைப் பறவை சீசனில், தமிழகத்தில் காணக்கூடிய முக்கியமான பறவை வகைகள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பெயர்: சங்குவளை நாரை அல்லது மஞ்சள் மூக்கு நாரை
ஆங்கிலப் பெயர்: Painted Stork
பெயர்க் காரணம்: நீளமான, மஞ்சள் நிற அலகைக் கொண்டிருப் பதால் மஞ்சள் மூக்கு நாரை என்றொரு பெயரும் உண்டு. ஆங்கிலப் பெயரின் அப்பட்டமான மொழி பெயர்ப்பான வர்ண நாரை என்ற பெயர் தவறானது.
அடையாளங்கள்: பார்க்கக் கவர்ச்சிகரமான நீர்ப்பறவை, கொக்கைவிடப் பெரிது. தடித்த நீண்ட அலகும் நீளமான கால்களும் கொண்டவை. சதுப்புநிலங்கள், ஏரி, நீர்நிலைகளில் வசிக்கும், இரைதேடும். இதன் கால்கள் வெளிர் சிவப்பு நிறம், செங்கால் நாரையைப் போலக் கால்கள் செக்கச் சிவப்பாக இருக்காது.
உணவு: மீன், நத்தை, நண்டு, தவளை, பூச்சிகள். கூட்டம்கூட்டமாக இரை தேடும் தன்மை கொண்டது.
தென்படும் இடங்கள்: வேடந்தாங்கல், திருநெல்வேலி அருகேயுள்ள கூந்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் பார்க்கலாம்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்