வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்த மயில்கள் விளைநிலங்களுக்கு படையெடுத்து உணவு வேட்டை நடத்தி வருகின்றன.
இந்தியாவின் தேசியப்பறவை. இப்பறவை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். மயில், காடும், காடும் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் மற்றும் சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. மயில்கள் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஜனவரி மாதம் வரையாகும். மயில் இனம் ஒரு முறை ஐந்திலிருந்து ஒன்பது முட்டை வரை இடுகின்றன. மயில் தோகையில் இரண்டு மீட்டர் நீளமுடைய நுாற்றுக்கணக்கான அழகிய கண் போன்ற தோற்றத்துடன் கூடிய பல வண்ண இறக்கைகள் இருக்கும். வானவில்லில், ஏழு நிறங்கள் மட்டும் இருக்கும் நிலையில், மயில் தோகையில் ஒன்பது நிறங்கள் காணப்படும்.
பெண் மயிலுக்கு பெரிய தோகை இல்லை. இனச்சேர்க்கை மற்றும் மழைக்காலங்களில் மயில் தோகை விரித்தாடும். முட்டையிடும் இனத்தை சேர்ந்த மயில் குஞ்சு பொரிக்கும் வரை அடைகாக்கும். முட்டையிலிருந்து வெளியேறிய இரண்டு மணி நேரத்திலேயே நடக்கத் துவங்குகின்றன. தாய் மயில் குஞ்சு மயில்களுக்கு இரை தேடச் சொல்லித்தரும் போது, மயில் இனம் மரத்திலிருந்து ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என கவனிக்கும். யாரும் இல்லையெனில், குட்டி மயில்களை இரை தேட பழக விடும். ஆட்கள் நடமாட்டம் தெரிந்தால்,’சமிக்ஞை’ செய்து குஞ்சுகளை அழைத்து தோகை விரித்து மறைத்துக்கொள்கின்றன. விளைநிலங்களின் விளையும் பயிர்களை ‘ருசி’ பார்த்து பழகிய மயில்கள் தற்போது மலைப்பகுதியில் வெகுவாக குறைந்து; கிராமப்பகுதியில், அதிகரித்துள்ளது.
வாழ்வாதாரம் தேடி….
மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனங்கள், தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதால், விவசாய விளை நிலங்களுக்கு படையெடுக்க துவங்கி விட்டன.
இரை தேடி தனது பயணத்தை துவங்கிய மயில் இனம், விளைநிலங்களை இருப்பிடமாக்கி வாழ்ந்து வருகின்றன. காடுகளில் வாழ்வதற்குரிய உணவு கிடைக்காததால், விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை உட்கொள்கின்றன. சிறிது சிறிதாக காட்டை விட்டு விளைநிலங்களுக்கு வரத்துவங்கிய மயில்கள், தற்போது விளைநிலங்களையொட்டியுள்ள முட்புதர்களின் இனப்பெருக்கம் செய்து குடும்பத்துடன் வாழத்துவங்கியுள்ளன. தற்போது, இனப்பெருக்க காலம் என்பதால், விளை நிலங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய துவங்கியுள்ளன.
பழகிப்போனது...
முதலில், மனிதர்கள் நடமாட்டத்தையோ… வாகனங்கள் சத்தம் கேட்டாலோ ஓடி ஒளிந்து கொண்ட மயில் இனங்கள், தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. மனிதர்கள் நடமாட்டத்தை பார்த்து பழகிய அவை, வெளியாட்கள் நடமாட்டத்தைக்கண்டால் மட்டும் ஓட்டம் பிடிக்கின்றன. விவசாய நிலங்களில், முதலில் வந்த மயில் இனங்களை கண்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். தோகை விரித்தாடும் மயில்கள் காண்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் அழகு என அதன் செய்கைகளை ரசித்து பார்த்தனர். மயில் இனங்களும், பழகிய ஆட்கள் என்றால், அவர்கள் தரும் உணவை சாப்பிட்டு விட்டு செல்லும் நிலையும் ஆங்காங்கே காணப்படுகிறது. காண்பதற்கே அரிதாக காணப்பட்ட மயில் இனம் தற்போது, அதிகளவு பார்ப்பதால், வளர்ப்பு பிராணிகள் போன்று அவையும் மாறியுள்ளன.
கவலையில் விவசாயிகள்...
விவசாய நிலங்களை படையெடுத்த மயில் இனங்கள் அழகாக இருந்தாலும், உணவிற்காக சாகுபடி செய்த பயிர்களை ‘ருசி’ பார்த்து வருகின்றன. மக்காச்சோளம், தட்டைப்பயறு போன்ற பயறு வகைகளை ருசி பார்ப்பதால், விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். அதிலும், பொள்ளாச்சி, தாவளம், ராமபட்டிணம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், மயில்கள் விளைநிலங்களுக்கு படையெடுத்து வருவது அதிகரித்து வருகிறது. தேசியப்பறவையான மயில் இனம் பெருக்கம் அடைவதால், விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். வனத்துறையினரும் இதில் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
- வாழ்விடங்களை இழந்த மயில் இனம், தனது வாழ்வாதாரத்தை தேடி தனது தேடலை துவங்கியது. முட்புதர்களில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், சுதந்திரமாக சுற்றித்திரிந்த மயில் இனம், நிரந்த இடம் தேடி அலைகின்றன. செல்லும் வழியில், இருக்கும் விளைநிலங்களில் தங்கி தங்களது பசியை போக்கி வருகின்றன.
விளை பயிர்களை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவை செய்வதில்லையென்றாலும், பசியை தீர்க்க அதற்கு வழி தெரியவில்லை. விளைநிலங்களில் சாகுபடி செய்த பயிர்களை மயில் இனம் ருசி பார்த்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தால், என்ன செய்வது என்ற கவலையும் விவசாயிகளிடையே நிலவுகிறது. - இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும். விளைநிலங்களுக்குள் சுற்றித்திரியும் மயில் இனம் குறித்து கணக்கெடுக்கலாம். வன உயிரின ஆய்வாளர்களை கொண்டு, இப்பணியை மேற்கொள்ளலாம். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
தேசியப்பறவையான மயில் இனமும் பாதுகாக்கப்பட வேண்டும்; விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதை மனதில் கொண்டு அரசு இப்பிரச்னைக்கு வன உயிரின ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகளோடு ஆலோசித்து ஒரு தீர்வை காண வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்