செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி எனபடுவது அரிசி சாகுபடி செய்யும் ஒரு புது முறை ஆகும். ஆங்கிலத்தில், இதற்கு SRI என்று பெயர். ஆப்ரிக்காவில் உள்ள மடகஸ்கார் என்ற இடத்தில இது கண்டு பிடிக்க பட்டால், இதற்கு “மடகஸ்கார்”  முறை என்றும் அழைக்க படுகிறது. தமிழ் நாட்டில் இதை “செம்மை நெல் சாகுபடி” என்று அழைக்கிறோம்.

இதோ, செம்மை நெல் சாகுபடி பற்றிய கேள்வி பதில்கள்:

“செம்மை நெல் சாகுபடி  முறை” என்றால் என்ன?

நடைமுறை நெல் சாகுபடி முறைகளிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதகமாக மாறுகிறது. வேர்கள் நன்றாக வளர்வதால் மொத்த பயிர் வளர்ச்சி மேம்படுகிறது. மகசூலும் அதிகரிக்கிறது.

செம்மை நெல் சாகுபடியில் ஏற்படும் நன்மைகள் யாவை?

 • இள நாற்றை நடுவதால் சடுதியில் நிலைகொண்டு, நடவு அதிர்ச்சி இல்லாமல் வளரத்துவங்குகிறது.
 • வேர்களின் வளர்ச்சி  அதிகமாகிறது
 • அதிக தூர்கள் வெடிக்கின்றன
 • இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிச்சேர்க்கை கடைசி வரை நன்றாக இருக்கிறது.

செம்மை நெல் சாகுபடி முறைக்குத் தேவையான விதை அளவு என்ன?

ஏக்கருக்கு 2 – 3 கிலோ விதை போதுமானது

செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதில் உள்ள நுட்பங்கள் என்னென்ன?

 • ஒரு குத்துக்கு 1 நாற்று
 • முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நோக்காமலும் ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது.
 • 25 X 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும்
 • சதுர நடவு செய்வதற்கு அடையாளமிட்ட கயிறையோ (அ) நடவு அடையாளக் கருவியையோ பயன்படுத்தலாம்.

செம்மை நெல் சாகுபடியில் நீர்ப்பாசன முறையைப் பற்றி சற்று கூறுங்களேன்?

 • பொதுவாக மண் மேல் நீரைத்தேக்கி வைக்காமல் ஆனால் மண் ஈரமாக இருக்குமாறு செய்ய வேண்டும்
 • நட்டதிலிருந்து தண்டு உருளும் பருவம் வரை 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைக்கட்டடி பின் அது வடிந்து லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைப்பாய்ச்சுதல் வேண்டும்.
 • தண்டு உருளம் பருவத்திற்குப் பின் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைக்கட்டி பின் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் மறைந்தவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்திற்கு நீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
 • காய்ச்சலும், பாய்ச்சலும் போன்ற இந்த நீர்ப்பாசன முறையால் மண்ணில் காற்றோட்டம் இருக்கும்
 • வேர்களின் பணியும், நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும்.

செம்மை நெல் சாகுபடியில் களைகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?

  • நட்டத்திலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை களைக் கருவியை (மொத்தம் 3 -4 தடவை) குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்
  • ஒரு தடவை உபயோகிக்க ஏக்கருக்கு 3 ஆள் தேவைப்படும்
  • களைக்கருவியை உபயோகிக்கும்போது களைகள் மண்ணில் அமுக்கி விடப்படுகின்றன. இதனால் களைச் செடிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மண்ணிற்கே திரும்புகின்றன.
  • களைகள் கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் களைக்கருவி உபயோகிப்பதால் ஏற்படும் முக்கிய பயன், மண் கிளறிவிடப்படுவதாகும். இதனால் ஏற்படும் பெளதீக, இரசாயன, நுண்ணுயிரியல் மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியில் பெறும் முன்னேற்றத்தைத் தருகின்றன.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “செம்மை நெல் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *