நீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட்டையின் இன்றைய நிலைமை

மனிதனின் வாழ்வுடனும், வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்து அவர்களது பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம், மகிழ்ச்சி, துக்கம் என எல்லாவற்றையும் வழிநடத்தும் அதிசய பொருளாக இருப்பது தண்ணீர்.

வறண்ட பூமி, வானம் பார்த்த பூமியென்றெல்லாம் புதுக்கோட்டையை கூறினாலும், நெல், வாழை, கரும்பு, கடலை, சோளம், மிளகு, சிறுதானியங்கள் என வியர்வை சிந்தி விளைவிக்கக்கூடிய மக்கள் வாழும் மண் இது. இங்கு விளையும் வாழை, பலாப்பழங்கள் வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

நிரந்தர ஆற்றுப் பாசன வசதியில்லாத, போதியளவு பருவமழை கிடைக்காத மாவட்டம் புதுக்கோட்டை. மாவட்டம் முழுவதும் ஏராளமான குளங்களையும் கண்மாய்களையும் சங்கிலித் தொடர்போன்ற வாய்க்கால்கள் மூலம் இணைத்து மழை நீரைச் சேமித்ததுடன், அதை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தி நீர் மேலாண்மையில் முன்மாதிரியாகத் திகழ்ந்தது புதுக்கோட்டை.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை குளங்களிலும், கிணறுகளிலும் குளித்த கிராம மக்கள், தற்போது குடிநீர் விநியோகிக்கப்படும் குழாயடியை நோக்கித் தஞ்சமடையும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அண்டை வீடுகளுக்கு இடையேயான பிரச்சினை ஆங்காங்கே எழுவதால், மாவட்டத்தின் தண்ணீர் பற்றாக்குறையை எதிரொலிக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மழவராயன்பட்டியில் நீரின்றி பயன்பாடில்லாமல் காட்சிப் பொருளாக மாறிய ஏற்றம்.

தனி சமஸ்தானமாக விளங்கியபோது புதுக்கோட்டை நகரில் கழிவு நீரும் மழை நீரும் ஒன்றோடொன்று கலந்துவிடாதபடி நேர்கொண்ட வீதிகள்தோறும் நேர்த்தியான திட்டமிடலோடு கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அவை 6 வழித்தடங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றோடொன்றாக இணைக்கப்பட்டுள்ளன. நகரில் இருந்த 60 நீர்நிலைகளில் தற்போது 32 மட்டுமே எஞ்சியுள்ளன.

இதேபோல, மாவட்டத்தில் சங்கிலித் தொடர் இணைப்பாக உள்ள 6,001 ஏரிகள், கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வழியாக சுமார் 7.33 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

இதில், பொதுப்பணித் துறையினரின் கண்காணிப்பில் 1,019 ஏரி, கண்மாய்கள் உள்ளன.

இவற்றில் 168 ஏரிகள், கண்மாய்களில் மட்டும் காவிரி நீரைத் தேக்கி வைத்து சுமார் 21,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற ஏரிகளெல்லாம் மழைநீரையே நம்பியுள்ளன. இதுதவிர, உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள சுமார் 4,942 குளங்களில் சுமார் 40 குளங்கள் மாயமாகியுள்ளன.

புதுக்கோட்டை அருகே வறண்டு காணப்படும் கவிநாடு கண்மாய்.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை 288 மி.மீட்டர், வடகிழக்குப் பருவமழை 501 மி.மீட்டர் என ஆண்டுக்கு சராசரி மழை அளவு 925 மி.மீட்டர்.

இதில், கடந்த 2003-ல் 764 மி.மீட்டர், 2004-ல் 1,123, 2005-ல் 1,260, 2006-ல் 821, 2007-ல் 890, 2008-ல் 1,135, 2009-ல் 854, 2010-ல் 998, 2011-ல் 969, 2012-ல் 639, 2013-ல் 565, 2014-ல் 751, 2015-ல் 971 எனவும் நிகழாண்டில் இதுவரை 413 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

இப்படி குறைவாக பெய்யும் மழை நீரையும் முறையாக தேக்கி வைப்பதற்கேற்ப நீர்நிலைகளின் கட்டமைப்பு இல்லை. இதனால் மழைநீர் வெள்ளாறு, பாம்பாறு, அக்கினி ஆறு, வில்லுனி ஆறு, அம்புலி ஆறு, குண்டாறு போன்ற காட்டாறுகள் மூலம் கடலில் கலந்துவிடுகிறது.

இதன் விளைவு கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு 80 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் தற்போது 800 அடியைக் கடந்துவிட்டது. மழை குறைந்ததால் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது. பாசனப் பரப்பும் 50 சதவீதமாக சுருங்கிவிட்டது. இதன் சாட்சியாக பாசனத்துக்காக பயன்படுத்தி வந்த ஏற்றம், மின்மோட்டார்களெல்லாம் காட்சிப் பொருளாக இருப்பதைக் காணலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கென சிறப்பு நிதியை ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் காடு திருத்திக் கழனியாக்கி, மேடு திருத்தி வயலாக்கி வியர்வை சிந்தி நாட்டுக்கே சோறு போடும் தங்களையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியும் எனக் கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.

குளமங்கலத்தில் புதர்மண்டிக் கிடக்கும் வில்லுனுனி ஆற்றில் உள்ள அணைக்கட்டு பகுதி.

இந்த ஆண்டாவது பருவமழை பெய்யுமா பெய்யாதா… என வானத்தை நோக்கி விழிகளை உயர்த்திக்கிடக்கும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மு.மாதவன் கூறியபோது,

“மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, கண்மாய் மற்றும் அவற்றுக்கான வரத்து வாய்க்கால்களை வருவாய்த் துறையினர் அளந்து எல்லைக் கல் நடவேண்டும். அதன்பிறகு படிப்படியாக முன்னுரிமை அடிப் படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும்” என்றார்.

விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் ராமதீர்த்தார் கூறியபோது,

“காவிரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் கிடைக்கும் கொள்ளிடம் உபரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டுவந்தால் செலவு குறையும். மேலும், தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் இருந்த 5 லட்சம் மாடுகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 1.5 லட்சமாக குறைந்துவிட்டது” என்றார்.

இதுகுறித்து அரசுத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது,

“கடந்த 10 ஆண்டுகளாக குளம், கண்மாய்களைத் தூர் வார அரசு நிதி ஒதுக்கவில்லை. நிதி கிடைத்ததும் தூர் வாரப்படும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் நீர்நிலைகளைத் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் ரூ.650 கோடி மதிப்பில் ஊரகப் பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரர்கள் கூட்டமைப்பு தலைவர் அத்தாணி ராமசாமி கூறியது:

மாவட்டத்தில் உள்ள காவிரிப் படுகை பகுதிகளில் அறந்தாங்கி, கறம்பக்குடி பகுதிகளில் மட்டுமே காவிரி பாசன வசதி உள்ளது. இந்தப் பகுதியில் கல்லணையில் இருந்து மும்பாலை வரையில் சுமார் 148 கிலோ மீட்டருக்கு கால்வாய் உள்ளது.

மணமேல்குடி, ஆவுடையார்கோவில், திருப்புனவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி பாசன வசதி இல்லை. இதனால் அங்கு மழை நீரை ஏரிகளில் தேக்கி, சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஏரிகள் நடப்பாண்டில் ஒரு இடத்தில்கூட தூர் வாரப்படவில்லை. மேலும், போதிய மழை இல்லாததால் பயிர்கள் முளைவிட்ட நிலையிலேயே கருகத் தொடங்கிவிட்டன. வளமான நெல் விளையும் பூமி இருந்தும் போதிய நீராதாரம் இல்லாததால் ஆண்டுதோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அரிசியை வாங்கி வரும் விநியோகிக்கும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முத்துராமலிங்கன் கூறியது: கட்டுமாவடியில் தொடங்கி அரசங்கரை வரையில் சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதி உள்ளது. கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தண்ணீர் உப்பாக இருப்பதால் குளம், ஏரிகளில் உள்ள மழைநீரையும், ஆறுகளின் ஊற்று நீரையும் குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அளவுக்கு அதிகமாக ஆற்று மணல் சுரண்டப்படுவதால் ஊற்றுத் தண்ணீருக்கும் வாய்ப்பு இல்லை. குளங்களும் மாசடைந்துவிட்டதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை. இந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வருவதில்லை.

இதனால் கடலோரப்பகுதி மக்களுக்கு வெளியூர்களில் இருந்து தனியார் மூலமாக நூற்றுக்கணக்கான லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. குடம் ரூ.10 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கும் வாரம் ஒரு முறையே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் நாள்கணக்கில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரால் கொசு உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கடலோர மக்கள் ஆளாகின்றனர். எனவே, காவிரியில் இருந்து நேரடியாக கடலோரக் கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றார்.

இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.எஸ்.தனபதி:

மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட நீர்வள, நிலவளத் திட்டத்தில் ரூ.526 கோடியில் 400-க்கும் மேற்பட்ட கண்மாய்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. மடைகள், மதகுகள் சீரமைக்கப்பட்டன. இந்தப் பணிகளையும் தரமாக மேற்கொள்ளாததுடன் கரைகளில் இருந்த மரங்களையும் வெட்டி அழித்ததால், கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எத்தனை குளங்கள் உள்ளன என்ற பட்டியல் ஊரக வளர்ச்சித் துறையிடம் இல்லை. இதையெல்லாம் தயார் செய்து மொத்தமுள்ள குளங்களையும் கண்மாய்களையும், அதற்கான வரத்து வாரிகளையும், கால்வாய்களையும் தூர் வார சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் அரசை வலியுறுத்தி இத்திட்டங்களுக்கான நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் முதல் மாவட்டமாக புதுக்கோட்டை மாறும் அபாயம் உள்ளது என்றார்.

காவிரி- குண்டாறு நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் மிசா.மாரிமுத்து:

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை யில் இருந்து இரு வழியாக காவிரி நீர் புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து, இங்கிருந்து குண்டாறுடன் இணைக்க அரசால் திட்டமிடப்பட்டது. அதில், ஒரு வாய்க்கால் மூலமாக காவிரி நீரை கொண்டுவர முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது.

மற்றொரு வழியாக காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற ரூ.5,166 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தும் தாமதிக்கப்படுகிறது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறுவதுடன் வெள்ளப்பெருக்கு காலத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றார்.

நன்றி: ஹிந்து 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *