பயிர்களை வாடாமல் காக்கும் திரவ நுண்ணுயிரி PPFM

வறட்சியின் காரணமாகப் பயிர்கள் கருகுவது, மழையில்லாமல் பயிர்கள் கருகுவதைத் தற்காலிகமாகத் தடுப்பதற்குப் புதிய திரவ உரம் உதவுகிறது. உயிர் உரங்கள் குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு தாவரங்களை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த நம்முடைய வேளாண் விஞ்ஞானிகளின் கண்களுக்கு உயிர்த்தொற்று மாதிரி இளஞ்சிவப்பு-ஊதா நிறத்திலான ஒரு பாக்டீரியா தெரிந்தது. முதலில் அது ஒரு புது மாதிரியான நோய்த்தொற்று என்று நினைத்தே, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார்கள்.

அதில் பயிர்களின் உயிர் காக்கும் மித்தைலோ பாக்டீரியா இருப்பதைக் கண்டுகொண்டனர். இந்தப் பாக்டீரியாவை உயிர்ச்சத்துள்ள உரக்கரைசலில் இட்டுப் பல்வேறு பயிர்களுக்கு இலைவழியே தெளித்துப் பார்த்ததில், நீரின்றி வாடிக்கொண்டிருந்த பயிர்கள்கூட, இந்த உரத்தைத் தெளித்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்கள் வாடாமல் காக்கப்படுவதைக் கண்டார்கள்.

அதைக் களத்தில் சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்தார்கள். 2012-ல் தஞ்சாவூரில் கடும் வறட்சி, மழையில்லை. காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் கருக ஆரம்பித்தன. அதைக் காப்பாற்ற விவசாயிகள் உயிர்த் தண்ணீர் திறந்துவிடக் கோரிக்கை விடுத்த நிலையில், 12.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்குப் போர்க் கால நடவடிக்கையாக இந்த உரக் கரைசல் தெளிக்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே 15 நாட்களுக்கு வாடிய பயிர்களை வாடாமல் காத்து நின்றது இந்த நீர்ம உரம். பயிர்கள் வாடாமல் நின்ற கால இடைவெளியில் பொழிந்தது மழை. பயிர்கள் உயிர்ப்பிடித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வயிற்றில் அப்போது பாலை வார்த்தது. பி.பி.எப்.எம் (Pink pigmented facultative methylotrophs) என்றழைக்கப்படும் இளஞ்சிவப்பு நிறமியைக் கொண்ட மித்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரத்தைப் பற்றி தெரிந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து; ஏன் கேரளத்திலிருந்துகூட விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள்.

பலன் தந்த உரம்

வறட்சி குறித்துப் பெரிதும் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில் விவசாயிகள் மட்டுமல்ல இதைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்த கோவை வேளாண் நுண்ணுயிரியல் துறை ஆராய்ச்சியாளர்கள். இது குறித்து இத்துறையின் இயற்கை வள மேலாண்மை இயக்ககத் தனி அலுவலர் கே. குமார் கூறியதாவது:

இது எட்டு ஆண்டுகால ஆராய்ச்சி. மித்தைலோ பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டபோது பயிர்களின் வேர், தண்டு, இலைப் பகுதித் திசுக்களில், இது அதிகம் காணப்படுவது தெரியவந்தது. அதைத் தனிமைப்படுத்தி ஆராய்ந்தபோது, ஆக்கின் சைட்டோகனின் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டது. மேலும் இது பயிர்களை வறட்சியிலிருந்தும், நோய்த் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பது தெரியவந்தது. அதனால் இதைப் பெருமளவு உற்பத்தி செய்து நெல், பருத்தி போன்ற பயிர்களில் பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

களத்தில் கிடைத்த பலன்

நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் விவசாய நிலங்களில், களத்தில் செயல்படுத்திப் பார்த்தோம். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாகத்தான் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்தக் கரைசல் ஒரு லிட்டர் விலை ரூ. 300. 200 மி.லி. கரைசலில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஏக்கர் பயிருக்கு இலைகளில் தெளிக்க வேண்டும்.

கைத்தெளிப்பான் மூலம் வளர்ச்சிப் பருவம், பூப்பூக்கும் தருணம், வளர்ந்த பருவம் என மூன்று நிலைகளில் இதைத் தெளித்தால், நிலத்தில் தண்ணீர் இன்றியே 15 நாட்களுக்குப் பயிர்கள் வாடாமல் காக்கப்படுகின்றன. திரும்ப 15 -20 நாட்கள் கழித்து ஓரளவு நீர் நிலத்தை ஈரப்படுத்தும் அளவுக்குக் கிடைத்தாலும் போதும், பிறகு 15 நாட்களுக்கு இந்தக் கரைசலைப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். அதற்கு மேலும் மழையோ தண்ணீரோ இல்லையென்றால் பயிர்களைக் காப்பது கஷ்டம்.

அடுத்தகட்ட ஆராய்ச்சி

இதுகுறித்து அடுத்தகட்ட ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இது குறித்துக் கேரள ஊடகங்களில் தகவல் வெளியானதன் காரணமாக, கேரள விவசாயிகள் ஐந்து ஆயிரம் லிட்டர்வரை இந்தத் திரவ நுண்ணுயிர் உரத்தை வாங்கிச் சென்றுள்ளனர். தற்போது இதன் பலனை உணர்ந்து கேரள அரசே 12 ஆயிரம் லிட்டர் உரக் கரைசலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

தஞ்சாவூரில் 2012-ல் செயல்படுத்திய பிறகு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடம் இந்த உரக்கரைசலை கொண்டு போயிருக்கிறோம். அதனால் அவர்கள் இது குறித்து விழிப்புணர்வு பெற்று, இதைத் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள்!’ என்கிறார்.

கோவை வேளாண் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தொடர்புக்கு:
தாவர மூலக்கூறு உயிரியல் மையம், கோவை-641003
தொலைபேசி: 04226611294

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *