தமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுகிறது.
பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு விவசாயிகள் தெளிப்பான்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லியை வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பான வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும் பல விவசாயிகள் ஏனோதானோவென்று தெளிக்கின்றனர்.
அதேபோல், தெளித்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுகின்றனர். வீடுகளிலும் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பு இல்லாத இடங்களில் வைக்கின்றனர். இப்படி பூச்சிக்கொல்லிகளை சரியான முறையில் கையாளாமல் போவதால் அதிகளவு உயிரிழப்பு, பயிர் பாதிப்புகள் சத்தமில்லாமல் ஏற்படுகின்றன.
அதிகரிக்கும் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட சுமார் 80 ஏக்கர் நெற்பயிர்கள் சமீபத்தில் கருகியதால் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பருத்தித் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி அடிக்கும் கூலி வேலைக்குச் சென்ற பட்டதாரி சுரேஷ்குமார் உயிரிழந்தார். கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறு கிராமங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கத்தால் 30 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஈரோடு பகுதியில் பூச்சிக்கொல்லி அடித்த இரண்டு பேர் பலியாகினர்.
இப்படி பூச்சிகொல்லியால் விபத்துகள், உயிரிழப்புகள், பயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கைகள்
இதுகுறித்து மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், வேளாண் விஞ்ஞானிகள் உஷாராணி, மனோன்மணி ஆகியோர் கூறியது: ‘‘பூச்சிக்கொல்லிகளை தேவைப்படும் அளவு மட்டுமே வாங்க வேண்டும். உடைந்த, ஒழுகிய, காலாவதியான, மூடி திறந்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை வாங்கக் கூடாது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நீர்நிலைகள், ஆறு, குளங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி பூச்சிக்கொல்லி டப்பாக்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.. அதனால், நீர்நிலைகளில் இந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது.
பூச்சிக்கொல்லி பாட்டில் லேபிளில் எச்சரிக்கை, ஆபத்து, விஷம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். விஷம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பெரும் ஊறு விளைவிப்பவை. இந்த வகையான பூச்சிக்கொல்லிகளை கூடுதல் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவை அதிக நச்சுத்தன்மை, சுமாரான நச்சுத்தன்மை, மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.
பூச்சிக்கொல்லி தெளிப்பவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். பூச்சிக்கொல்லி தெளிக்கப் பயிற்சி பெற்ற ஆட்களையே பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிக்கும் தெளிப்பான்களைப் பரிசோதனைசெய்து கசிவுகள் இருந்தால் சரிசெய்துகொள்ள வேண்டும்.
தெளிக்கும் முறை
பூச்சிக்கொல்லி தெளிக்கும் இடத்துக்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உடலிலோ, கைகளிலோ பூச்சிக்கொல்லி பட்டுவிட்டால் உடனே சுத்தம்செய்துகொள்ள முடியும்.
குழந்தைகள், முதியவர்கள், கருவுற்ற தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பூச்சிக்கொல்லிகளை கையாளக்கூடாது. பூச்சிக்கொல்லி தெளிப்பவர் பாதுகாப்பான உடைகளான முழுநீளச் சட்டை, நீண்ட கால்சட்டை, கால்களுக்கு தரமான பூட்ஸ் காலணிகள், தலைக்குத் தொப்பி அல்லது முண்டாசு, கண்களுக்கு வெள்ளைநிற கண்ணாடி, கைகளுக்கு பாதுகாப்பு ரப்பர் உறைகளையும், வாய்க்கு அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் முகமூடிகளையும் பயன்படுத்த வேண்டும்.
பூச்சிக்கொல்லி அடித்து முடித்தவுடன் சோப்பு போட்டுக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்ள வணே்டும். கழற்றிய ஆடைகளை சலவை செய்யாமல் மறுபடியும் உடுத்தக் கூடாது. இந்த ஆடைகளை அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளுடன் சேர்த்து சலவை செய்யக் கூடாது. பூச்சிக்கொல்லி தெளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் குடிக்கவோ, புகைப்பிடிப்பதோ கூடாது.
எப்பொழுதுமே பூச்சிக்கொல்லியைக் கலக்கும்பொழுது காற்று வீசும் திசையில் நின்றே கலக்க வேண்டும். கொள்கலனை முகர்ந்து பார்க்கக் கூடாது. காலை, மாலை வேளைகளில் மட்டுமே பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது பூச்சிக்கொல்லி தெளிக்கக் கூடாது.
கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவை
அருகில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருக்கும் பயிர்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் அவற்றுக்கு பூச்சிக்கொல்லி சென்று சேராத வண்ணம் கவனத்துடன் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிப்பவர் உடலில் காயங்கள், புண்கள் எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும். தனி ஆளாக பூச்சிக்கொல்லியை அடிக்கக்கூடாது. எப்பொழுதும் ஒருவர் உடன் இருப்பது நல்லது.
பாதுகாப்பான, காற்றோட்டமான, உலர்ந்த, ஈரப்பதமில்லாத அறையில் குழந்தைகள், மற்றவர்கள் அணுகமுடியாத வகையில் பூச்சிக்கொல்லிகளை பூட்டி வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளை சமையலறையில் வைக்கக் கூடாது. நேரடியாக சூரியஒளி, மழை படும் இடங்களிலும், நெருப்புக்கு அருகிலும் வைக்கக் கூடாது. பூச்சிக்கொல்லி அடிக்கும் வேலை முடிந்த அன்றே பயிர்ப் பாதுகாப்புக் கருவிகளில், பூச்சிக்கொல்லி கலன்களில் உள்ள பூச்சிக்கொல்லியைக் காலி செய்துவிட்டு சுத்தம்செய்து வைக்க வேண்டும்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்