மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா!

பொங்கலோ பொங்கல்… பொங்கலோ பொங்கல்… இப்படி உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே, புதுப்பானையில் பச்சரிசிப் பொங்கல் வைத்து இயற்கையையும், கால்நடையையும் வணங்குவது உழவர்களின் மரபு.

அப்படி பொங்கல் வைக்கும்போது, அரிசி, கரும்பு, வெல்லம் வரிசையில் கட்டாயம் இடம் பெறுவது… மஞ்சள். இப்படி வணங்குதலுக்கு உரிய மங்கலப்பொருளாக விளங்கும் மஞ்சள் சாகுபடி… கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல நூறு ஏக்கரில் நடந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், பொன்னேகவுண்டன்புதூர், கே. பழனியப்பன் பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி செய்து வருகிறார்.

“வக்கீலுக்குப் படிச்சுருந்தாலும், விவசாயத்தைத்தான் முக்கிய தொழிலா செஞ்சுட்டு வர்றேன். இங்க ஆறு ஏக்கர் பூமியிருக்கு. இது, மணல் கலந்த வண்டல்மண் பூமிங்கிறதால, வாழையும் மஞ்சளும்தான் பிரதானப் பயிர். மூணு ஏக்கர்ல மஞ்சள், ரெண்டு ஏக்கர்ல வாழை, ஒரு ஏக்கர்ல சப்போட்டா இருக்கு. எல்லாத்துக்கும் நாலு வருஷமா சொட்டு நீர்ப்பாசனம்தான் பண்றேன். போர்வெல் தண்ணி மூலமாதான் விவசாயம் நடக்குது.

மஞ்சள்

இருபத்தஞ்சு வருஷமா மஞ்சள் சாகுபடி பண்ணிட்டுருக்கேன். ‘சேலம் பெருவெட்டு’ங்கிற மஞ்சள் ரகம்தான் எங்க பகுதியில பிரபலம். நானும் அதைத்தான் விதைப்பேன். வைகாசிப் பட்டத்துல நட்டா, தை மாச வாக்குல அறுவடைக்கு வந்துடும். இந்த வருஷமும் தைப்பொங்கலுக்கு சாமி கும்பிட நம்ம தோட்டத்து மஞ்சளே வந்துடும்” என்று குதூகலமாகப் பேசிய பழனியப்பன், ஒரு ஏக்கர் நிலத்துக்கான சாகுபடி பற்றிய விஷயங்களைச் சொன்னார். அதை அப்படியே தொகுத்திருக்கிறோம்.

வைகாசிப் பட்டம் ஏற்றது!

‘மஞ்சள் நடவுக்கு களிமண்ணைத் தவிர, மற்ற அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. என்றாலும், செம்மண், வண்டல் மண்ணில் அதிக மகசூல் கிடைக்கும். வைகாசிப் பட்டம் ஏற்றது. நடவு நிலத்தைப் புழுதியாகுமாறு உழவு செய்து, மூன்று மாதங்கள் நிலத்தை நன்றாக ஆறப்போட வேண்டும். அதைத் தொடர்ந்து ஏக்கருக்கு 15 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, நன்கு உழவு செய்து, மூன்றரை அடி பார் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சொட்டு நீர்க்குழாய்களை அமைத்துக் கொள்ளலாம்.

வேரழுகலைத் தடுக்கும் விதைநேர்த்தி!

கடந்த போகத்தில் விளைந்த மஞ்சளில் இருந்து விதைக்கிழக்குகளைத் தேர்வு செய்து, சேமித்து வைத்தால், நடவு சமயத்தில் விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். விதைநேர்த்தி செய்வதன் மூலமாக, மஞ்சளை அதிகம் தாக்கும் வேரழுகல் நோயில் இருந்து காப்பாற்ற முடியும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 900 கிலோ விதைக்கிழங்கு தேவைப்படும். 10 லிட்டர் பஞ்சகவ்யாவில் விதைக்கிழங்குகளை சில நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, நிழலில் உலர்த்தி, முக்கால் அடிக்கு ஒரு கிழங்கு வீதம் வரிசை நடவு செய்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, வாரம் ஒரு பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 30-ம் நாள் களை எடுக்க வேண்டும். அதிலிருந்து அடுத்த 5 மாதங்களுக்கு, மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில், 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து, சொட்டு நீர் வழியே கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களையும் கொடுக்கலாம்.

மஞ்சள் சாகுபடி

நோய்களுக்கு வேட்டு வைக்கும் வேம்பு!

மஞ்சளைப் பொருத்தவரை இலைப்புள்ளி நோய், பச்சைப்புழு, வாடல் மற்றும் வேரழுகல் ஆகியவற்றின் தாக்குதல்கள்தான் அதிகம் இருக்கும். இலைப்புள்ளி நோய் வராமல் தடுக்க, வேம்பு அஸ்திரம் தெளிக்க வேண்டும். இயற்கை அங்காடிகளில் கிடைக்கும் நீம் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி வீதம் கலந்து மாதம் ஒரு முறை செடிகளின் மீது புகை போல தெளித்து வந்தால், இலைப்புள்ளி மற்றும் புழு தாக்குதல்களை வருமுன் தடுக்கலாம். பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி வந்தாலே, வேரழுகல் நோய் கட்டுப்படும்.

ஏக்கருக்கு 4 டன் மகசூல்!

நடவு செய்த 10-ம் மாதத்தில் தாள்களில் உள்ள பச்சையம் குறைந்து வெளுத்து தலைசாய்ந்து மடியத் தொடங்கும். அந்த சமயத்தில் தண்ணீர் விட்டு மஞ்சள் கிழங்குகளைத் தோண்டி எடுக்க வேண்டும். தண்டுகளை அகற்றிய பிறகு, கிழங்குகளைத் தோண்டுவது நல்லது. அறுவடை செய்த கிழங்குகளை குவியலாகக் கொட்டி வைத்து, வேக வைத்து, இயந்திரம் மூலம் பாலீஷ் செய்தால்… மணம் மிக்க மஞ்சள் கிழங்கு கிடைக்கும். அவற்றைப் பக்குவமாக மூட்டைகள் பிடித்து, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக 4 டன் மஞ்சள் கிடைக்கும்.

மஞ்சள் வயலில் பழனியப்பன்

இருப்பு வைத்தால், கூடுதல் லாபம்!

சாகுபடிப்பாடம் சொன்ன பழனியப்பன், நிறைவாக வருமானம் பற்றி சொன்னார். ”ஒரு ஏக்கர் மஞ்சள் உற்பத்தி செய்ய, நிலம் தயாரிப்புல இருந்து, விற்பனை வரைக்கும் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகுது. எங்க மஞ்சளை ஈரோடு மார்க்கெட்டுலதான் கொண்டு போய் விற்பனை செய்றோம். இன்னிக்கு தேதிக்கு  குவிண்டால் 6 ஆயிரத்து 500 ரூபாய் விலை போகுது. விலை அதிகமா கிடைக்குற வரைக்கும் இருப்பு வெச்சு வித்தா… கூடுதல் லாபம் பாக்கலாம். ஒரு ஏக்கர்ல 4 டன், அதாவது 40 குவிண்டால் மஞ்சள் கிடைக்கும். ஒரு குவிண்டால் 6 ஆயிரம் ரூபாய்னு வித்தாலும், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவு போக, 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்று பூரிப்புடன் சொன்ன பழனியப்பன்,

பலே பஞ்சகவ்யா!

”இப்போதைக்கு ‘இயற்கை பாதி, செயற்கை பாதி’ங்குற கணக்குலதான் உரம் போடுறேன். அடுத்த வருஷத்துல இருந்து முழுசா இயற்கைக்கு மாறலாம்னு இருக்கேன். அதுக்குக் காரணம், பஞ்சகவ்யாதான். பஞ்சகவ்யா தெளிச்சதால, போன வருஷத்தைவிட இந்த வருஷம் கிழங்கு திடமா, நிறமா கிடைச்சுருக்கு” என்று சொன்னார்.

தொடர்புக்கு, கே.பழனியப்பன், செல்போன்: 09842879557


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *