இலுப்பை மரத்தின் அற்புதங்கள்!

இந்த எண்ணெய்யில் விளக்கெரியும்போது, மனதுக்கு இதமான ஒரு வாசனை காற்றில் பரவும். நின்று நிதானமாக எரியும் என்பதால் தீவட்டிகளிலும் இந்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள், எண்ணெய்க்காக இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்.

140 கிலோ சர்க்கரை... 60 கிலோ எரி சாராயம்... இலுப்பை மரத்தின் அற்புதங்கள்!

லகில் முதலில் மதிக்கப்பட வேண்டியது மரங்கள்தான். மனிதன் கொடுக்கும் இடர்பாடுகளை எல்லாம் சுத்தப்படுத்தி மழையைக் கொண்டு வரும் அற்புத படைப்பு அவைதாம். ஆனால், அலட்சியத்தால் அவற்றை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட்டோம். இதனால் நிறைய பாரம்பர்ய மரங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களில் ஒன்றான இலுப்பை மரமும் இப்போது அழிவின் விளிம்பில் சிக்கியிருக்கிறது. 1950-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி 10.000-க்கும் குறைவான மரங்களே இருக்கின்றன என்பதுதான் வேதனையான உண்மை. தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த இலுப்பை மரங்கள் பல சிறப்பான குணங்களைக் கொண்டவை.

அகன்ற, நீண்ட இலைகளைக்கொண்ட வகை, தென் இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உள்ளது. இதன் தாயகம் இந்தியா. இலுப்பை மரமானது மேகக்கூட்டங்களை வரச்செய்து மழையைத் தரும் குணம் கொண்டது. இலுப்பை தமிழகம் தவிர நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா, கேரளாவிலும் அதிக அளவில் இருக்கின்றன. இது சப்போட்டா மரக் குடும்ப வகையைச் சேர்ந்தது.

இலுப்பை

இலுப்பை மரம் வெப்ப மண்டல தாவர வகையைச் சேர்ந்தது. வறண்ட நிலங்களிலும் எளிதாக நிலைத்து நின்று வளரக்கூடியது. இலுப்பையின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமானது. சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்ட தாவரம். இதன் இலை, பூ, விதை, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. சங்க காலம் முதல் இன்று வரை மருத்துவத்துக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி, இருமல், மூலநோய், வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு, காயம் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

இலுப்பை மரத்தில் டிசம்பர் ஜனவரி மாதத்தில் இலைகள் உதிர்ந்து விடும். பிறகு ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி, மார்ச் மாதத்திலும் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல், மே, ஜூனில் பழங்கள் விடும்.

‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற பழமொழியும் இலுப்பையின் அவசியத்தை உணர்த்துகிறது. நன்கு விளைந்த ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை இலுப்பைப் பூவை எடுக்கலாம். 200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து 300 மி.லி எண்ணெய் எடுக்கலாம். இதுவே ஒரு டன் இலுப்பைப் பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை எடுக்கலாம். இதில் தனிப் பொருளாக 300 கிலோ எரி சாராயமும் கிடைக்கும். இந்த எரி சாராயம் மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம். ஒரு மரத்தில் கிடைக்கும் 200 கிலோ பூவிலிருந்து 140 கிலோ சர்க்கரையும், 60 கிலோ எரி சாராயம் எடுக்கலாம்.

இலுப்பை எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியும் கூட, சமையலுக்கும் சிறந்த எண்ணெய்யாகப் பயன்படுகிறது. இதுதவிர, விறகாகவும் பயன்படுத்தலாம். மேலும், அறை மரச் சாமான்கள், சமையல் பாத்திரங்கள், மாட்டு வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உப்பு நீரை அதிகமாகத் தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதுபற்றி ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். “பழந்தமிழர்கள், இலுப்பைப்பூவையும், பழத்தின் சதைப்பகுதியையும் நொதிக்க வைத்துச் சோமபானம் தயாரித்தனர். அது, உடல் நலனுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மதுவாக இருந்தது. இன்றும் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இதை விரும்பிக் குடித்துவருகிறார்கள். இந்தப் பகுதிகளில் இலுப்பையிலிருந்து தயாரிக்கும் பானமே பிரதான மதுவாக இருக்கிறது. இதற்காக, வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இலுப்பைப்பூக்களை வாங்கி வந்து மது தயாரிக்கிறார்கள்.

இலுப்பை

பூவைப் போலவே இலுப்பை விதையும் சிறப்பு வாய்ந்தது. பழம் தமிழகத்தில் இருளை விலக்கிய பெருமை இலுப்பைக்கு உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் கோயில், வீடுகளில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய்தான் பயன்பட்டது. இந்த எண்ணெய்யில் விளக்கெரியும்போது, மனதுக்கு இதமான ஒரு வாசனைக் காற்றில் பரவும். நின்று நிதானமாக எரியும் என்பதால் தீவட்டிகளிலும் இந்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டது.

பல மன்னர்கள், எண்ணெய்க்காக இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்.

இலுப்பை மரத்தில் உள்ள காய்கள் பழுக்கத் துவங்கும்போது, பழங்களை உண்பதற்காகப் பறவைகள், வண்டினங்கள் எனப் பல்லுயிர்களும் படையெடுத்து வரும். அதனால், விவசாய நிலங்களில் ஆங்காங்கே இதை நட்டு வைத்தால், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். இலுப்பை வளர்ப்பதன் மூலம், இயற்கை எண்ணெய் தயாரிப்பு, மதுபான ஆலைகள் எனப் பல தொழில்களை உருவாக்க முடியும். இவை எல்லாவற்றையும்விட மழையையும் ஈர்க்க முடியும்” என்றார்.

மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும். இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடையப் பால் போன்ற சாறுள்ள மரம். இதன் பூக்கள் 2.5 – 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 – 5 செ.மீ. நீளமிருக்கும். தேங்காய் எண்ணெய்க்கும், நெய்யுக்கும் பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணெய்யைப் பயன்படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 – 2.5 செ.மீ. ஆழத்தில் நடவு செய்வது வழக்கம். ஈரப்பதம் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின் 15 நாள்களில் முளைக்க ஆரம்பிக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் நடவு செய்யலாம்.

வணிக ரீதியில் இம்மரமானது ஏக்கருக்கு சுமார் 150 முதல் 180 மரங்கள் வரை நட்டு வளர்க்கலாம்.

ஆண்டொன்றுக்கு எண்ணெய் எடுப்பது, பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சிகைக்காய் என அனைத்துமே பணம்தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரமானது ஒரு கன அடி ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. 60 ஆண்டுகள் கழித்து ஒரு மரத்தின் விலை 2 லட்சத்துக்கும் மேல் விலைபோகும்.

இலுப்பை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று அடித்துச் சொல்லலாம். வெளவாலுக்குப் பிடித்த உணவு, இலுப்பை பழங்கள்தான். இலுப்பை மரங்களின் அழிவும் கூட வெளவ்வாலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *