இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட மதுரைத் தெப்பக்குளம்!

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தச் சுத்திகரிப்பு முறை, மீனாட்சிக்கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகின்றது. இந்தப் பணி எல்லோரது பாராட்டையும் பெறத் தொடங்கியுள்ளது.

இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட மதுரைத் தெப்பக்குளம்... உற்சவத்திற்குத் தயார்!

`நம்ம தெப்பக்குளமா இது?’ – ஆச்சர்யத்தோடு ரசித்தபடியே கடந்துசெல்கின்றனர், மதுரை மக்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிறைந்த காட்சியும், நீராழி மண்டபத்தின் நிழல் சுத்தமான தெளிந்த நீரில் விழுந்து அனைவரையும் வசீகரித்து வருவதும்தான் மக்களின் இந்த ஆச்சர்யத்துக்குக் காரணம். இதில் என்ன வியப்பு உள்ளது என்றால், உண்டு. இந்தக் குளத்தில், இந்தியாவிலேயே முதல்முதலாய் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

400 ஆண்டுகளுக்குமுன்பு திருமலை நாயக்க மன்னரால் வைகையின் தென்கரையோரமாய் வெட்டப்பட்டதுதான், மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். தென்னிந்தியக் கோயில் தெப்பக்குளங்களிலேயே இது மிகப்பெரியது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா, ஆண்டுதோறும் தைப் பௌர்ணமியன்று இங்குக் கோலாகலமாக நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் இதற்காக வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் ஏற்றி, குளம் நிரப்பப்படும். விழா முடிந்த சில மாதங்களில் தண்ணீர் வற்றி குளம் முழுவதும் புல்தரை மைதானமாய் ஆகிவிடும். வைகையில் நீர்ப்பெருக்கம் இன்றி தண்ணீர் ஏற்ற முடியாத ஆண்டுகளில் திருவிழா, `நிலை தெப்பத்தில்’தான்!

சுத்தம் செய்யப்படுவதற்கான பணிகள்

`தெப்பக்குளத்தில் நிரந்தரமாய்த் தண்ணீர் நிரப்பவேண்டும்’ என இப்பகுதி மக்களும், பக்தர்களும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் நிரப்பப்படும்போதும் துர்நாற்றம் வீசி, பாசி படர்ந்து, கொசு உற்பத்திக்கான மொத்தக் குத்தகை இடமாக இந்தக் குளம் மாறிவிடும். இவற்றிற்கெல்லாம் தீர்வுகாண நடத்தப்பட்ட பல முயற்சிகளில் முக்கியமானதும், தற்போது வெற்றியடைந்திருப்பதுமான `இயற்கைமுறை சுத்திகரிப்பு’, தற்போது குளத்தைக் குணமாக்கி வருகின்றது.

இந்த ஆண்டுத் தெப்ப உற்சவம், வருகிற 21-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தண்ணீர் நிரப்பத்தொடங்கிவிட்டனர். தற்போது, குளம் நிரம்பிக் கண்களைக் கவர்கின்றது. வைகையில் அசுத்தங்கள் கலப்பது, ஊரறிந்த உண்மை. அப்படியிருந்தும் குளத்தின் நீர், இவ்வளவு தூய்மையாய்.. எப்படி?

சென்னையில் 1989-ல் தொடங்கப்பட்ட எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் என்ற தனியார் அமைப்பின் ஒரு பிரிவான பசுமைக்கோயில் இயக்கத்தின் தொழில்நுட்பத் தலைமை ஆலோசகர் முனைவர் ராஜசேகர் மற்றும் அவரது குழு செய்திருக்கும் சீரிய பணியின் மகத்தான விளைவுதான் இது.

சுத்தம் செய்யப்படும் தெப்பக்குளம்

முனைவர் ராஜசேகரன், இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற `58 வயது இளைஞர்’. அவர் இந்தச் சுத்திகரிப்புமுறை பற்றிக் கூறுகையில், “குளத்தில தண்ணீர் விழுறப்பவும், தண்ணீர் நிரம்பி நின்னிருக்கிறப்பவும்ன்னு இரண்டு செயல்பாடுகள் இந்த முறையில இருக்கு” என்றார். முதல் செயல்பாடு, ஆற்றிலிருந்து தண்ணீரை இறைக்கும்போது நடக்கிறது. அதாவது, இன்ட்ரின்சிக் பயோ ரெமிடியேசன் (Intrinsic Bio remidiation). ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் அளவிலான நுண்ணுயிர்க்கலவையைச் சொட்டுச்சொட்டாகக் கலந்து விடுகின்றனர். குளத்தில் துர்நாற்றம் ஏற்படுத்தும் ஆர்கானிக், பாஸ்பேட், நைட்ரானிக் போன்ற நச்சுகளை இவை அழித்துவிடும். அடுத்த செயல்பாடுதான் முக்கியமானது. பைட்டோ ரெமிடியேசன் (Phyto remidiation). மிகுந்த மருத்துவக் குணம் நிறைந்த வெட்டிவேர்களையும் கல்வாழைகளையும் குளத்தில், மூங்கில் படகுகள் செய்து மிதக்க விட்டிருக்கின்றனர்.

ஒரு வெட்டிவேர், 2.5 கிலோ கார்பன் டைஆக்சைடை உள்ளிழுத்துக் கொள்ளுமாம். “இந்த இருவகைச் செயல்பாடுகளாலும், குளத்தை நச்சு ஏற்பட்டிடாதபடி தூய்மைப்படுத்த முடியும். நம்மோட மூதாதையர்கள் கிட்ட வெட்டிவேர் உபயோகம் இருந்துச்சு, நாம விட்டுட்டோம். திருச்சி ஊட்டத்தூர் கோயில்ல வெட்டிவேர் நீர்தான் தீர்த்தமாத் தர்றாங்க.

மேலும், வெட்டிவேரை நிலத்தில் பயிரிட்டால் மண்ணரிப்பைத் தடுக்கும். ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 120 நாடுகள்ல `வெட்டிவேர் டிரீட்மென்ட்’ங்கிற பேர்லயே  வெட்டி வேர்களை மருத்துவத்துக்கு அதிகமா யூஸ் பண்றாங்க. நாங்களும் இப்போ அப்படி ஒரு `டிரீட்மென்டை’த்தான் இந்தக் குளத்துக்குப் பண்ணிக்கிட்டிருக்கோம். இந்தத் திட்டத்துக்குப் பெரிய செலவுகள் கிடையவே கிடையாது. மனித சக்தியும் அதிகம் தேவை இல்லை. அதனால், இது எதிர்காலப் பசுமை மீட்புப் பணிகளில் தவிர்க்க முடியாத திட்டம்” என்கிறார், ராஜசேகரன்.

Cleaning

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தச் சுத்திகரிப்பு முறை, மீனாட்சிக்கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகின்றது.

இந்தப் பணி எல்லோரது பாராட்டையும் பெறத் தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்குப் பக்க பலமாய் பொதுமக்கள் செய்ய வேண்டியது, குளத்துநீர் சுத்தம் பேணுதல் மட்டுமே. நீர்க்குளத்துக் குளிர்காற்று சில்லென்று வீசட்டும், அம்மையப்பன் தைத்தெப்பம் அழகுகூட்டிச் சேர்க்கட்டும்!

நன்றி: விகடன்

வீட்டில் கழிவு நீரை கல்வாழை கொண்டு சுத்தப்படுத்த – இங்கே படிக்கவும்

அபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி !


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட மதுரைத் தெப்பக்குளம்!

  1. Venkatesan says:

    மிகவும் நல்ல முயற்சி. அனைத்து இடங்களிலும் இது போன்று செயல்படுத்தினால் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *