பொள்ளாச்சியில் குப்பையிலிருந்து உருவாகும் உரமும் காய்கறிகளும்..!

ற்போது எங்கு பார்த்தாலும் இயற்கை உரம் என்று சொல்லும் சூழ்நிலை வந்திருக்கிறது. நம் வீட்டிலிருந்து கிடைக்கும் காய்கறி கழிவுகளை வெளியில் தூக்கிப்போட்டு விடுகிறோம். சிலரைத் தவிர அதை யாரும் உரமாக மாற்ற முன்வருவதில்லை.

ஆனால், காய்கறி கழிவுகளிலிருந்து உரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது, பொள்ளாச்சி நகராட்சி. வீட்டிலிருந்து கிடைக்கும் குப்பைகளை மக்களிடம் பிரித்து பெற்றுக்கொண்டு அதை 60 நாள்களில் உரமாக மாற்றி விவசாயிகளுக்குக்  கொடுத்து வருகிறது. மேலும், காய்கறி விளைச்சலில் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

காயகறி தோட்டம் - பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி தென் மண்டல அளவில் தூய்மை இந்தியா திட்டத்தில் 87-வது இடமும், மாநில அளவில் 12-வது இடமும் பிடித்துள்ளது. இந்தப் பொள்ளாச்சி நகராட்சியில் `தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் தனிநபர் மக்கும் / மக்காத குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு, உரம் தயாரிப்பு, காய்கறி உற்பத்தி உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன.

கடந்த ஆறு மாதங்களாக, பொள்ளாச்சியில் மக்களிடமிருந்து பெறப்படும் மக்கும் குப்பை மூலம் புதிய முயற்சியாக இயற்கை உரங்களை நகராட்சியிலிருந்து பெற்றுக்கொண்டு, அதிலிருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர், விவசாயிகள். துப்புரவாளர்கள், காலையிலேயே சென்று மக்களிடம் குப்பைகள் பெற்று அதை ஓரிடத்தில் கொட்டுவது நம் ஊர் வழக்கம். ஆனால், பொள்ளாச்சி நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மிதிவண்டியில் செல்வது, மாற்றாக பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார் சென்று மணியடித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று மக்களிடம் பிரித்து வாங்கி வருகின்றனர்.

குப்பை உரம்- பொள்ளாச்சி

பொள்ளாச்சி மக்கள் தங்கள் வீட்டிலிருந்து மக்கும் குப்பை மக்காத குப்பை எனப் பிரித்து துப்புரவாளர்களிடம் கொடுக்கின்றனர். மக்களிடம்  பெற்றுவந்த பிறகு உரமாக்கும் பணியைத் தொடங்குகின்றனர். பிரித்து எடுத்த குப்பைகளை சரிபார்த்துவிட்டு, வீட்டிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், உணவுக் குப்பைகள் மார்க்கெட்டிலிருந்து கிடைக்கும் காய்கறிக் குப்பைகள் என அனைத்தும், ஓர் இயந்திரத்தில் போட்டு பொடியாக மாற்றப்படுகிறது.

பின்னர் அது ஒரு டன் கூடிய தொட்டிக்குள் நிரப்பப்படுகிறது. தினந்தோறும் கிடைக்கும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மூன்று அடுக்குகளாக நிரப்பப்படும். அந்தக் குப்பைகளை 14 நாள்களுக்கு ஒருமுறை மண்ணைக் கிளறி விடுகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம்  60 நாள்களில் உரம் தயாராகிவிடும். உரம் தயாரிக்கும் மற்றொருமுறை குப்பைகளை குழியில் நிரப்பி மாட்டுச்சாணம் மற்றும் மண் போட்டால் குப்பை எளிதில் மக்கிவிடுகிறது.

இது பூச்சிகள் வராமல் இருப்பதற்கும் சீக்கிரம் குப்பைகள் மக்குவதற்கும், ஒரு டன் அளவிற்கு 100 லிட்டர் தண்ணீர், தயிர் 2 லிட்டர், 5 கிலோ நாட்டுச் சர்க்கரை கலந்து தெளிக்க வேண்டும். மண்ணைப் பதப்படுத்த வாளைச் சருகு மற்றும் தென்னை மட்டை அரைத்து மண்ணில் கலந்த பிறகு விதைகள் போட்டு நல்ல விளைச்சலை எடுக்கின்றனர்.

இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றைக் கொண்டு எச்சங்களாக, சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கின்றன. 45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்.

காய்கறிகள்

புதன்கிழமை அன்று நெகிழி பொருள்கள் பெறப்பட்டு அதில் மறுசுழற்சிக்கு உபயோகமாகும் பொருள்கள் நகராட்சி உள்ளே விற்கப்படும். மறு சுழற்சிக்கு ஏற்காத பொருள்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். இந்த உரங்களைப் பயன்படுத்தி பல காய்கறிகளை பொள்ளாச்சி நகராட்சி விளைவித்து மக்களுக்கு வழங்கி வருகிறது. நகராட்சி விளைவிக்கும் காய்கறிகள் உண்ணும்போது சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. இயற்கை உரம்தான் அதற்கு முக்கியக் காரணம். இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளையும், உரங்களையும் மக்களும், விவசாயிகளும் வாங்கிச் செல்கின்றனர். துப்புரவாளர்களே இந்தக் காய்கறிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற பராமரிப்பு வேலைகளை கவனித்துக் கொள்கிறார்கள். இயற்கை உரம் கிலோ 5 ரூபாய்க்கும், மண்புழு உரம் கிலோ 10 ரூபாய்க்கும், நகராட்சி பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முயற்சியில் துப்புரவாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் காய்கறிகளை மக்களுக்குக் கொடுத்து சம்பாதிக்கின்றனர். குப்பைகளை அகற்றினால் போதும் என மக்கள் நினைக்காமல் மக்காத குப்பைகளைப் பிரித்து, தங்கள் வீட்டிலிருந்து கொண்டே மக்கும் குப்பைகள் கொண்டு உரங்களைத் தயாரித்து தங்களுக்கு, அதில் தேவையான காய்கறிகளைப் பெறலாம்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *