கொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9 லட்சம்!

‘அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தை கவனிக்க முடியாது,’ ‘தண்ணி ரொம்ப குறைவா இருக்கு’, ‘உரம், பூச்சி மருந்து செலவை நினைச்சாலே பயமா இருக்கு’ என கவலைப்படுபவர்களுக்கும், ‘செடியை நடவு செஞ்சமா, அறுவடை பண்ணுனமா, பணத்தை எண்ணுனமானு இருக்க வெள்ளாமைதாம் நமக்கு சரிப்பட்டு வரும்‘ என நினைக்கும் வெள்ளந்தி விவசாயிகளுக்குமான தீர்வாக இருக்கிறது கொடுக்காப்புளி.

நடவு செய்து, பாசனம் மட்டும் செய்து வந்தால் போதும், மகசூல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பராமரிப்பு செய்தால் போதும், பூச்சிக்கொல்லி செலவே இல்லை. ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வருமானமாகக் கொடுக்கிறது கொடுக்காப்புளி.

முப்பது வயதைக் கடந்த அனேகரின் நினைவுகளில் பசுமையாக இருக்கும் இதன் நினைவுகள். இன்றைக்கு கிடைப்பதுப் போல் விதவிதமான திண்பண்டங்கள் அன்றைக்கு இல்லை. ஆனால், இன்றைய திண்பண்டங்களில் கிடைக்காத சுவையும், மகிழ்ச்சியும் கொடுப்பவை மாங்காயும், கொடுக்காப்புளியும். கிராமங்களில் வரப்போரங்களில், கிணற்று மேடுகளில், ஒருசில வீடுகளின் அருகே கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். சுருள் சுருளாக பச்சையும், சிவப்புமாக இருக்கும் இதனைப் பறிப்பதுதான் அன்றைய சிறுவர்களின் ஆகச்சிறந்த பொழுதுப்போக்கு.

Courtesy: Pasumai Vikatan

விடுமுறை நாட்களில் கையில் தொரட்டியோடு, கொடுக்காப்புளி மரங்களே கதியென கிடந்த நிகழ்வு நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். மரத்தில் பழங்களை பறிப்பதில் சிறுவர்களுக்கு போட்டியாக இருப்பது கிளிகளும், அணில்களும்தான். பறவைகளின் எச்சங்கள் மூலமாக, பரவும் இந்த மரம் வேலியாகவும் பயன்படுகிறது. அரசுப்பள்ளிகளில் இருந்து ஆங்கிலப்பள்ளிக்கு குழந்தைகள் செல்லத் தொடங்கிய பிறகு கொடுக்காப்புளியை ருசிக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிட்டாமலே போய்விட்டது. ஆனால், வட்டம் தொடங்கிய இடத்தில்தானே முடியும். ஒருகாலத்தில் நம்வாழ்க்கை முறையோடு இணைந்திருந்த பலவற்றை இழந்து விட்டு, தற்போது அதற்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறோம். கொடுக்காப்புளியும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறது. சிறுவயதில் இலவசமாக பறித்து தின்ற பழம், இன்றைக்கு கிலோ 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். இந்த சத்தான சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, கொடுக்காப்புளியை ஏக்கர் கணக்கில் தனிச்சாகுபடியாக செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் சில விவசாயிகள்.

5 ஏக்கர் கொடுக்காப்புளி, 5 ஏக்கர் நாவல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. தனது மானாவாரி நிலம், ஐந்து ஏக்கரில் கொடுக்காப்புளி சாகுபடி செய்திருக்கிறார். அதைப்பற்றி பேசியவர், ‘‘எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். இது முழுக்க மானாவாரி பூமி. நான் வாங்கும்போது தரிசா இருந்தது. நானும் வாங்கி எந்த விவசாயமும் செய்யாம, தரிசாத்தான் போட்டு வெச்சிருந்தேன். இதுக்கு இடையில, விருதுநகர் பக்கத்துல தாதம்பட்டிங்கிற ஊர்ல பாண்டியன்னு ஒரு விவசாயியை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரு, கொடுக்காப்புளியை தனி விவசாயமா செஞ்சிருந்தாரு. வேலிப்பயிரை இப்படி தனி விவசாயமா செய்றாரேனு ஆச்சரியப்பட்டு அவரு தோட்டத்துக்கு போய் பார்த்தேன். இதுல நல்ல வருமானம் கிடைக்கும்னு சொன்னாரு.. இருந்தாலும் எனக்கு அவ்வளவா நம்பிக்கை வரலை. தொடர்ந்து ரெண்டு வருஷமா அவரு தோட்டத்துக்குப் போய் பார்த்ததுல அவரு சொன்னது அத்தனையும் உண்மைனு தெரிஞ்சுகிட்டேன். அவரு சொன்ன ஆலோசனையின்படி தான் இந்த இடத்துல கொடுக்காப்புளியை நடவு செஞ்சேன். தண்ணி குறைச்சலா, அதிகப்பாடில்லாத பயிரா இருந்தது எனக்குத் தோதாகிடுச்சு. அதேப் போல வண்டியூர் பக்கத்துல ஒருத்தர் நாவல் சாகுபயில பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்காரு. அவரையும் பார்த்து, அவரோட ஆலோசனையும் கேட்டுகிட்டேன். இவங்க ரெண்டு பேர் ஆலோசனையும் இந்த பத்து ஏக்கர் நிலத்துல செயல்படுத்தியிருக்கேன். அஞ்சு ஏக்கர் நிலத்துல கொடுக்காப்புளி, அஞ்சு ஏக்கர் நிலத்துல நாவல் நடவு செஞ்சு ரெண்டு வருஷமாச்சு.

30 அடி இடைவெளி! ஏக்கருக்கு 50 செடிகள்!

தண்ணி வசதிக்காக போர்வெல் போட்டுருக்கேன். என்னோட மண் செம்மண் சரளை மண். எவ்வளவு தண்ணி விழுந்தாலும் உடனே மண்ணு குடிச்சிடும். அதனால சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கேன். கொடுக்காப்புளியைப் பொறுத்தவரை நான் ஒட்டுகன்னுதான் நடவு செஞ்சிருக்கேன். இது வழக்கமான நாட்டு மரத்தைப் போல அதிக உயரத்துக்குப் போகாது. இதுக்கு எந்த பண்டுதமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதலே இருக்காது. காய்க்கிற நேரத்துல மரத்துக்கு கொஞ்சம் ஊட்டம் கொடுத்தாப் போதும். நான், ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் கணக்குல ஹுயூமிக் ஆசிட்டை சொட்டுநீர்ல கலந்து விடுவேன். மத்தப்படி பிக்கல் பிடுங்கல் இல்லாதப் பயிர். பறவைங்க தொல்லை இருந்தாலும், அதுனால அதிக பாதிப்பு இருக்காது’’ என்றவர் கொடுக்காப்புளி சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி பேசினார்.

கொடுக்காபுளி

எல்லா மண்ணிலும் வளரும்!

இது அனைத்து வகையான மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண் சரளை நிலங்களில் நன்றாக வளரும். கொடுக்கப்புளி, நாவல் இரண்டுக்கும் நடவுமுறை ஒன்றுதான். நடவு செய்யவுள்ள நிலத்தில் மூன்று அடி நீளம், அகலம், ஆழத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த குழியில் இரண்டடி உயரத்துக்கு கரம்பை, குப்பை எருவைப் போட்டு குழியை ஒருமாதம் ஆறவிடவேண்டும். அதற்கு பிறகு, செடியை நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சலாம். கொடுக்காப்புளி நடவுக்கு புரட்டாசி, ஐப்பசி (செப்டம்பர், அக்டோபர்) மாதங்கள் ஏற்றவை.

இந்த மாதங்களில் நடவு செய்தால், தொடர்ந்து கிடைக்கும் மழையில் செடி வளர்ந்துவிடும். ஒவ்வொரு குழிக்கும் முப்பது அடி இடைவெளி இருக்கவேண்டும். இப்படி நடவு செய்யும் போது ஏக்கருக்கு 50 செடிகள் வரை நடலாம். நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் வரும். அவற்றை உதிர்த்து விடவேண்டும். அப்போதுதான் மரம் பருமனாகவும், வலுவானதாகவும் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பூக்களை அனுமதித்தால், இரண்டாவது ஆண்டில் இருந்து கொடுக்காப்புளி மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதம்வரை கொடுக்காப்புளியின் மகசூல் காலம்.

இதற்கு ஆண்டுக்கு இரண்டு முறை அடியுரம் கொடுத்தால் போதும். பூச்சி, நோய் தாக்காது. காய்ப்பு வரும் நேரத்தில் வளர்ச்சி ஊக்கிகளைக் கொடுக்கலாம். நான்காவது ஆண்டில் இருந்து ஒருமரத்தில் 100 முதல் 150 கிலோ காய்கள் கிடைக்கும்‘‘ என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

5 ஏக்கர்! ஆண்டுக்கு 9 லட்சம்!

‘‘நான் நடவு செஞ்சி ரெண்டு வருஷம் ஆச்சு. இந்த வருஷம் கொடுக்காப்புளி பரவலாக் காய்ச்சது. அஞ்சு ஏக்கர் நிலத்துல இருந்து மொத்தம் 550 கிலோ மகசூல் கிடைச்சது. வெளிமார்க்கெட்டுல கிலோ 300 ரூபாய்க்கு விக்குறாங்க. நான் மொத்த வியாபாரிங்களுக்கு கொடுத்ததால கிலோவுக்கு 150 ரூபாய் விலைக்கிடைச்சது. 550 கிலோவுக்கு மொத்தம் 82 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சது. அஞ்சு ஏக்கர்லயும் மொத்தம் 250 மரங்க இருக்கு. மூனாவது வருஷம் ஒரு மரம் 50 கிலோ காய்க்கும்னு சொல்றாங்க. ஆனா குறைஞ்சபட்சம் ஒருமரம் 25 கிலோ காய்ச்சாலும், அடுத்த வருஷம் 6250 கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியா ஆறாயிரம் கிலோனு வெச்சிகிட்டாலும், ஒன்பது லட்ச ரூபாய் கிடைக்கும்.

அடுத்தடுத்த வருஷங்கள்ல இந்த வருமானம் இன்னும் அதிகமாகும். ஒன்பது லட்சத்துல, ரெண்டு லட்ச ரூபாய் செலவுப் போனாலும், ஏழு லட்சம் லாபம். என்னைக் கேட்டா, அதிகம் அலட்டிக்காத, அதிக தண்ணி, பராமரிப்புத் தேவைப்படாத கொடுக்காப்புளி தரிசு நிலத்தோட தங்கம்னு தான் சொல்வேன். கொஞ்சமா தண்ணி வசதி இருந்து நிலத்தை தரிசாப் போட்டு வெச்சிருக்கும் விவசாயிகளுக்கு அருமையான பயிர் கொடுக்காப்புளி.’’ என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு : கிருஷ்ணசாமி, செல்போன் : 9489250517 .

நன்றி:பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *