இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோருக்கும் விவசாயிக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சென்னை மேற்கு கே.கே. நகரில் தொடங்கப்பட்டதுதான் ‘தி மில்லட் ஸ்டோர்‘ என்கிறார், அதன் உரிமையாளர் ராஜேஷ்.
பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பல தானியக் கஞ்சி மிக்ஸ், மாவு மற்றும் பொடிகள், அவல், கைக்குத்தல் அரிசி ரகங்கள் இங்கே கிடைக்கின்றன. வெள்ளிக்கிழமைதோறும் காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுகின்றன.
குழந்தைகள் ஸ்பெஷல்
“சத்துமாவு கஞ்சி மிக்ஸ், மஞ்சள் தூள், செக்கு எண்ணெய் ரகங்கள், கோதுமை, கம்பு, கேழ்வரகு, சிவப்பு அரிசி அவல், கவுனி அவல், சிவப்பு சோள அவல், கம்பு அவல், வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், பூங்கார் அரிசி ரகங்கள் போன்றவை நுகர்வோரின் விருப்பமான தேர்வாக இருக்கின்றன.
கேழ்வரகு மற்றும் கம்பு மாவில் ஊற்றப்படும் தோசைகள் குழந்தைகள் பெரிதும் விரும்பும் காலை உணவாக இருக்கின்றன. சத்துமாவுக் கஞ்சிக்கான மிக்ஸிலும் குழந்தைகளுக்குத் தோசை மற்றும் ரொட்டி வார்த்துத் தருகின்றனர். அல்லது சிவப்பு அரிசி அவலில் உப்புமா செய்து கொடுக்கின்றனர். குழந்தைகளின் பயன்பாட்டுக்கென்றே மாப்பிள்ளை சம்பா அரிசி பொரி ரகத்தில் செய்யப்பட்ட பொரி உருண்டையைத் தயாரிக்கிறோம்.
இதுதவிரக் கமர்கட், கம்பு லட்டு, கேழ்வரகு லட்டு, அமரந்த் லட்டு (தண்டுக் கீரையின் விதைகளிலிருந்து சேகரிக்கப்படும் அமரந்த் அதிகப் புரதச் சத்தும் அதிக ஊட்டச்சத்தும் கொண்டது) ஆகியவற்றை விற்பனை செய்கிறோம். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக இருக்கின்றது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத காகிதப் பைகளிலேயே பொருட்களைக் கட்டித் தருகிறோம், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைத் தருவதில்லை. நுகர்வோரையே வீட்டிலிருந்து பைகளை எடுத்துவருவதற்கு ஊக்கப்படுத்துகிறோம். எண்ணெய் ரகங்களை வாங்குவதற்கு உரிய பாட்டில்கள் அல்லது ஜாடிகளை எடுத்துவரச் சொல்கிறோம்” என்கிறார் ராஜேஷ்.
ராஜேஷ், தொடர்புக்கு: 09840383783
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Wow. Can u pl give me the address of the shop