தேனி மாவட்டம் பள்ளப்பட்டியில் மத்திய அரசு உர நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சையது முகமது, சாதனை படைத்து வருகிறார்.
இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் சுபாஷ் பாலேக்கர், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மையங்களில் இவரும், மனைவியும் பயிற்சி பெற்றனர்.
அதன் பலனாக 50 சென்ட் இடத்தில் அரளி சாகுபடி செய்ய முடிவு செய்தார். இதற்காக சேலத்தில் இருந்து வீரிய ரக அரளி நாற்றுக்களை வாங்கி வந்தார். மாட்டு சாணம், கோமியம், கருப்பட்டி கலந்து 200 லிட்டர் நீரில் பஞ்சகாவியம் தயாரித்தனர்.
செடி, கொடிகளை பறித்து பஞ்சகாவியத்தில் நனைத்து நடவு இடத்தில் குழிதோண்டி புதைத்தனர்.
செடி, கொடிகள் மக்கிய நிலையில் ஒரு அரளி செடிக்கும் அடுத்த செடிக்கும் இரண்டரை அடி அகல இடைவெளியும், 12 அடி நீளத்தில் வரிசை நடவு முறையில் நட்டார். ஐந்தாவது மாதத்தில் பூ பூத்தது. அதன் பின் தினமும் மகசூலாக அரளி பூ எடுத்து மார்க்கெட்டிற்கு அனுப்புகிறார்.
நாள் ஒன்றுக்கு 25 முதல் 40 கிலோ வரை கிடைக்கிறது. பனிக்காலங்களில் ஒரு கிலோ பூ ரூ.300 வரை விலை போனது. தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை பூ எடுக்கலாம். பூ பறித்து 30 நிமிடம் நீரில் வைக்க வேண்டும். அதில் உள்ள பால் வெளியேறிய பின் ‘பேக்கிங்’ செய்தால் ஒரு வாரம் வரை மொட்டுகளாக இருக்கும். மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று பேக்கிங் திறந்தால் அரைமணி நேரத்தில் மலர்ந்து விடும்.
‘பாலிஹவுசில்’ வெள்ளரி தோட்டத்தின் மற்றொரு பகுதியில் 30 சென்டில் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் ‘பாலிஹவுஸ்’ முறையில் யு.எஸ்., ரக வெள்ளரி சாகுபடி செய்துள்ளார்.
தோட்டம் முழுவதும் வெள்ளரி காய்த்து தொங்குகிறது. 100 நாட்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தினமும் 500 கிலோ வெள்ளரி பறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அனுப்புகிறார். அரளி, வெள்ளரி தினமும் சாகுபடியாகி வருமானம் கிடைக்கிறது.
சையது முகமது கூறுகையில், “அரளி நடவு செய்து 20 ஆண்டு வரை மகசூல் பெறலாம். 2 மாதத்திற்கு ஒரு உரம், ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்தால் தொடர்ந்து மகசூல் கிடைக்கும்.
நாற்று, நடவு என ரூ.20 ஆயிரம் செலவு ஆனது. தற்போது பூ மார்க்கெட் நல்ல விலை கிடைப்பதால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் கிடைக்கிறது. பூ பறிக்க தினமும் 6பேர் தேவை. தோட்டக்கலை துறையில் ரூ.4.50 லட்சம் மானியம் உட்பட ரூ.11 லட்சம் செலவில் ‘பாலிஹவுஸ்’ அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளேன். அதில் ஒருநாள் விட்டு ஒருநாள் 400 முதல் 500 கிலோ எடுக்கிறோம்.
தற்போது கிலோ ரூ.15க்கும், கோடையில் கிலோ ரூ.100 வரை விலைபோனது. ஒரு சாகுபடியில் 20 டன் வரை மகசூல் பெறலாம். இதன்பின் மல்லிகை சாகுபடி செய்ய உள்ளேன்,” என்றார். தொடர்புக்கு 08148621443 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்