‘‘சீரான விதை நடவிற்காக நீலப்பச்சைப் பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் ஊட்டம் பெற்ற உருண்டை வடிவ விதைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன,’’ என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.இதுகுறித்து, மதுரை விவசாயக் கல்லுாரியில் அவர் மேலும் கூறியதாவது:
- நீலப்பச்சை பாசிகள், 25 ஆண்டுகளாக விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவற்றின் பயன்பாடு குறைந்துள்ளது.
- விதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், இயந்திர நடவு என்பது சிலநேரங்களில் சாத்தியமில்லாதது.
- அதே நேரத்தில் தரமான விதைகள் என சான்றளிக்கப்பட்டாலும், அவை 80 சதவீத அளவே முளைப்புத் திறன் பெற்றுள்ளன.
- விதைகளின் முளைப்புத்திறனை, 100 சதவீதமாக்கவும், சீரான விதை நடவிற்காகவும், பல்கலை விதை மையம் சார்பில், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீலப்பச்சைப் பாசிகளுடன் சூடோமோனஸ், ட்ரைகோடெர்மா, அசோஸ்பைரில்லம் ஆகிய நுண்ணுயிரிகள், தேவையான நோய் எதிர்ப்பு பூச்சிக்கொல்லி கலந்து விதைகளின் மீது தடவி உருண்டை வடிவ விதைகளை உருவாக்குகிறோம்.
- இவற்றை இயந்திரத்தில் செலுத்தும் போது, நடவு ஒரே சீராக இருக்கும்.
- விதைகளின் பயன்பாடு, 50 சதவீத அளவு குறைந்து விடும்.
- வளர்ச்சி சீராக இருப்பதால், அறுவடையும் இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் சாத்தியமாகும்.
- தற்போது எள், மிளகாய், தக்காளி, கத்தரி காய்கறிப் பயிர்களில் உருண்டை விதைகளை உருவாக்கியுள்ளோம். விரைவில் பருத்தி விதை தயாராக உள்ளது.
- மேலும், சிறுதானிய விதைகளை இம்முறையில் உருவாக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சிறுதானிய விதை உற்பத்தி சாத்தியமானால் வறட்சியைத் தாங்கி, நோய் எதிர்ப்பு சக்தியுடன், இவை வளரும்.இத்தொழில்நுட்பம் மாவட்ட வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்