இயற்கை அங்காடி நடத்தும் இன்ஜினீயர்களின் வெற்றிக்கதை

எவ்வித முன் அனுபவமும் இன்றி, ஆறு இன்ஜினீயர்கள் இணைந்து இயற்கை அங்காடி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். சேலத்தைச் சேர்ந்த செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ் மற்றும் நித்தியானந்தம் ஆகிய ஆறு பொறியியல் பட்டதாரிகள் சேலத்தில் உள்ள பேர்லேண்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகில் கிரீனோசன் (Green o Sun) என்ற பெயரில், இயற்கை அங்காடி ஒன்றை நடத்திவருகிறார்கள். இயற்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் காய்கறிகளைப்பெற்று, இவர்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களைச் சந்தித்து இயற்கை அங்காடி குறித்துப் பேசினோம்.

இயற்கை அங்காடி நடத்தும் எஞ்சினியர்கள்

இயற்கை அங்காடி தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

நாங்கள் ஆறு பேருமே அடிப்படையில் விவசாயப் பின்னணியைக் கொண்டவர்கள். படிப்பை முடித்தவுடன் நாங்களும் மற்ற இளைஞர்கள் போலவே எங்கள் படிப்பு சம்பந்தமான வேலையைத் தான் செய்து வந்தோம். பின்பு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று தோன்றியது. ரசாயனக் கலப்பில்லாத இயற்கை காய்கறிகள் கிடைப்பது, மிகப்பெரிய சவாலான விஷயமாக இருப்பதை உணர்ந்தோம். அப்போதுதான் இயற்கை விவசாயம் பற்றிய யோசனை வந்தது. நாங்களாகவே இயற்கை விவசாயம் செய்யலாம் என்ற முடிவில் இறங்கினோம். ஆனால், கடைசியில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்தல் என்பது கடினமானதாக இருக்கும் என்பதை உணர்ந்தோம். ஏற்கெனவே இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நேரடியாக அவர்களிடம் இருந்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம் என்று தோன்றியது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்த இயற்கை அங்காடியை நடத்தி வருகிறோம்.

 

காய்கறிகளை கொள்முதல் செய்வது பற்றி சொல்லுங்கள்…

பல்லடத்தில் நடைபெற்ற பாரம்பர்ய இயற்கை விவசாயிகள் கூட்டம் ஒன்றில் நாங்களும் கலந்துகொண்டோம். அப்போதிலிருந்து தான் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை அறிந்துகொண்டு, அவர்களிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வருகிறோம். தற்போது இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்புவகைகள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை விற்பனை செய்கிறோம். வாரத்தில் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி வருகிறோம். விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால் நாங்கள் பேரம் பேசுவதில்லை. விவசாய நிலங்களில் இருந்து காய்கறிகளை அங்காடிக்கு எடுத்து வர ஆகும் செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். நாங்களும் விவசாய நிலங்களுக்குச் சென்று இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் தானா என்று உறுதிசெய்துதான் காய்கறிகளை கொள்முதல் செய்து வருகிறோம்.

இயற்கை உரத்தால் விளைவித்த காய்கறிகள்
இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை எப்படி கண்டறிவது?

இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது. அவற்றின் ருசி மாறாது. அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டியதில்லை. காய்கறிகளின் பளபளப்பு குறைவாகக் காணப்படும். சிறிய அளவில் பூச்சித்தாக்குதல்கள் இருக்கும். கீரைகளின் வேர்கள் நீளமாக இருக்கும். இவை போல சில விஷயங்களைக் கவனித்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டறியலாம். நாங்கள் கொள்முதல் செய்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்தோ, இரண்டு நாள்களுக்கு மேல் வைத்தோ விற்பனை செய்வதில்லை.

 

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவு எப்படி உள்ளது?

“இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளின் விலை கூடுதலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். சுமார் ஐந்நூறு இயற்கை விவசாயிகள், காய்கறிகளை தற்போது வரை எங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நானூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர். இவர்களில் சுமார் நூறுபேர் எங்கள் இயற்கை அங்காடியைத் தவிர வேறு எங்கும் காய்கறிகளை வாங்குவதில்லை என்கிறார்கள். இயற்கை விவசாயிகளுடன் இணைந்து நாங்களும் விவசாயம் செய்யலாம் என்ற முடிவில் உள்ளோம். விரைவில் இயற்கை விவசாயப் பணிகளைத் தொடங்குவோம். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் என்று விளம்பரப்படுத்தி, காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது. சரியான விழிப்புஉணர்வு இல்லாததால் வாடிக்கையாளர்களும் அதை நம்பி வாங்கிச் செல்கின்றனர்” என்ற தங்களுடைய ஆதங்கத்தையும் அவர்கள் பதிவு செய்தனர்.

இயற்கை அங்காடியில் வாடிக்கையாளர்

காய்கறிகளை வாங்க வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசினோம். ”நான் இங்கு ஒரு வருடமாக காய்கறிகளை வாங்குகிறேன். அறுவடை செய்த சில மணி நேரங்களிலேயே காய்கறிகள் நம் கைக்குக் கிடைப்பதால், காய்கறிகள் இயற்கையானதாகவும், தரமாகவும் இருக்கின்றன. இங்கு வாங்கிச் சென்று சமைக்கும் காய்கறிகள் மிகவும் ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளன. இந்த மாதிரி காய்கறிகளை வாங்குவதால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி இந்த பட்டதாரி இளைஞர்களுக்கும் நாம் ஆதரவாக இருக்கிறோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது”.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *