இது கருவிகளின் (Gadget) காலம். சின்ன சின்னக் கருவிகள் பெரிய பெரிய வேலைகளை எளிதாக முடிக்கின்றன. அதுவும் குறிப்பாக ஆள்பற்றாக்குறை நிலவும் விவசாயத்தொழிலில் பண்ணைக்கருவிகளின் பங்களிப்பு பிரதானமாக விளங்குகிறது.
விவசாயத்தில் நெல் நடவு தொடங்கி களை எடுக்கவும், அறுவடை செய்யவும், அறுத்த நெல்லை போரடித்து, தூத்தி, புடைத்து, மூட்டை பிடிக்கும் வரை கருவிகள் வந்து விட்டன. அதே சமயம் குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை நடவு செய்யவும், பறிக்கவும் சரியாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் நம் நாட்டில் இல்லை என்பது விவசாயிகளின் வருத்தமாக இருந்து வந்தது.
அதைப் போக்கும் விதமாக , காய்கறி நாற்றுக்களை எளிதாக நடவு செய்யும் கருவி ஒன்றை ஹாங்காங் நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார், முன்னோடி வேளாண் வல்லுனர் கோவை சீத்தாராமன். ஒன்றரை கிலோ எடையும், இரண்டரை அடி உயரமும் கொண்டு நாதஸ்வரம் போல காட்சி தரும், இந்த நடவு கருவி குறித்து சீத்தாராமன் கூறியதாவது;
மிளகாய், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை கட்டைவிரலால் அழுத்தி பதியவைத்து ஈரநடவு செய்வார்கள். அப்படி செய்யும் போது நாற்றுக்களில் நாற்று மடிந்து ஆணிவேர் மேல் நோக்கி வந்து விடும். இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் முழுமையாக செடிகளுக்கு போய் சேராது.
அதன் காரணமாக, செடிகளின் விரைவான வளர்ச்சி பாதிக்கப்படும். வைரஸ் நோய் தாக்கியது போல செடிகள் வாடி காணப்படும். அதனால் விளைச்சல் குறையும்.
இது பல காலமாக உலகம் முழுவதும் காய்கறி விவசாயத்தில் உள்ள பிரச்னை. இதைப் போக்கும் விதமாக ஹாங்காங் நாட்டில் உள்ள வேளாண் பொறியியல் ஆராய்ச்சி மையம் ஒன்று குறிந்த எடை கொண்ட சில்வரால் செய்யப்பட்ட நடவு கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி காய்கறி நாற்றின் வேர்கள் செங்குத்தாக மண்ணில் பதியும் படி நடவு செய்யமுடியும். கடந்த மாதம் இந்த கருவியை ஹாங்காங் நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளேன். இதுவரை 30 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கருவி மூலம் நாற்று நடவு செய்துள்ளேன்.
மேலும் இந்த கருவி மூலம் விவசாயத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. வழக்கமாக ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறி நாற்று நடவு செய்ய குறைந்த பட்சம் 15 ஆள் தேவைப்படும். அவர்களுக்கு கொடுக்கப்படும் சராசரி கூலியாக 4ஆயிரம் ரூபாய். ஆனால், இந்த கருவியின் விலை 3,500 ரூபாய் மட்டும்தான். இந்த கருவி நடவுக்கு ஏக்கருக்கு ஒரு ஆள் மட்டும் போதுமானது. நீண்டகாலம் பழுதில்லாமல் வேலை செய்யும் விதமாக இந்தக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
காய்கறி விவசாயத்தில் இந்தக் கருவி ஒரு புரட்சி என்றே கூறலாம்.
விவசாயத்தை காப்பாற்ற இது போன்ற புதிய கண்டுபிடிப்புக்கள் அவசியமாகிறது.
‘அக்ரி’ சீத்தாராமன்: 09786656000
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்