அமெரிக்க வேலையைத் துறந்து இயற்கை வேளாண்மை!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர், அமெரிக்காவில் பார்த்துவந்த வேலையைத் துறந்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய அப்பா ராதா கிருஷ்ணன், மத்திய அரசுப் பணியில் இருந்தவர். அதேநேரம் விவசாயத் திலும் ஆர்வத்துடன் இருந்தார். இதனால் சங்கருக்கும் இயல்பாகவே விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளங்கலை பொறியியல் படிப்பில் சங்கர் விவசாயத்தைத் தேர்வு செய்தார்.

பின்னர் அமெரிக்கா சென்று உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் துறையில் எம்.எஸ். ஆராய்ச்சிப் படிப்பு படித்தார். வளாக நேர்காணல் மூலம் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அங்கேயே அவருக்கு வேலையும் கிடைத்து. மூன்று நிறுவனங்களில் சில ஆண்டுகளுக்கு வேலை பார்த்தார். இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரிவதில் நாட்டம் இல்லாமல், இந்தியாவுக்குத் திரும்பினார்.

பெங்களூரு வேலை துறப்பு

பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தார். இருந்தபோதும், வேளாண்மை மீது இருந்த ஆர்வம் மட்டும் அவரிடம் குறையவில்லை. இதைத் தொடர்ந்து மென்பொருள் பணியில் இருந்தபடியே, இயற்கை விவசாயம் தொடர்பாக விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். நம்மாழ்வார் உருவாக்கிய கரூர் வானகத்தில் சென்று பயிற்சி பெற்றார்.

இயற்கை வேளாண்மை தொடர்பான பல்வேறு புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொண்டு கடந்த 2014-ம் ஆண்டு மென்பொருள் பணியை உதறினார். முழுநேர இயற்கை விவசாயியாக மாறினார்.

முதல் கட்டமாக வெம்பாக்கம் அருகே உள்ள மேல்கஞ்சாங்குடி பகுதியில் 16 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதற்கு ‘பசு வனம்’ என்ற பெயரிட்டு இயற்கை வேளாண்மை பணிகளைத் தொடங்கினார். முதலில் உளுந்து, துவரை போன்றவற்றைப் பயிரிட்டார். தற்போது நெல், அவரை பயிர்களைப் பயிரிட்டுள்ளார். வாழை, புதினா, பப்பாளி, முருங்கை போன்ற பயிர்களையும் பயிரிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் தற்போது ஈடுபட்டுவருகிறார்.

நஞ்சில்லா உணவே லாபம்

தன்னுடைய பணிகள் குறித்து சங்கர் பகிர்ந்துகொண்டது:

எனது குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் இயல்பாகவே எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் இருந்தது. ஆனாலும் உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் ரசாயன வேளாண்மையில் எனக்கு ஈடுபாடு இல்லை. முதலில் நம் குடும்பத்துக்கும், நமக்கும், நண்பர்களுக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் பணிகளைத் தொடங்கினேன்.

எங்கள் தேவைக்குப் போக நண்பர்கள், உறவினர்களுக்கு இயற்கை வேளாண் உற்பத்தியை விற்பனை செய்துவருகிறோம். தற்போது பெரிய அளவில் லாபம் இல்லை. எங்கள் குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் நஞ்சில்லாமல், ஆரோக்கியமாகக் கிடைப்பதுதான் பெரிய லாபம். அது எனக்குப் பெரும் திருப்தியைத் தருகிறது.

பல பயிர் சாகுபடி

இயற்கை வேளாண்மையில் ஒவ்வொரு பயிரைப் பயிரிடும்போதும் புதிய பாடம் கற்கிறோம். இந்த மண்ணில் எது நன்றாக விளைகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம். மண்ணும் இயற்கை வேளாண்மைக்குத் தகுந்ததுபோல் தற்போது மாறிவருகிறது. இயற்கை வேளாண்மைக்கு நாட்டு மாடு அவசியம். அவற்றை வாங்கிப் பராமரித்துவருகிறோம். எதிர்காலத்தில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று நம்புகிறோம். வேளாண் பணிகளில் எனக்கு உதவியாக, என் தம்பி பிரகாஷ் இருக்கிறார்.

இயற்கை வேளாண்மைக்குத் திரும்புபவர்கள் எடுத்தவுடன் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வரக் கூடாது. அதேநேரம் இயற்கை வேளாண்மையை முறையாகச் செய்தால் லாபம் கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல் நிலத்தில் ஒரே பயிரைப் பயிரிடக் கூடாது. பல பயிர்களைக் கலந்து பயிரிட வேண்டும். அப்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் பலன் தரும். ஒரு சில பொய்த்துப் போனாலும், எஞ்சியவை நிச்சயம் பலன் தரும். இயற்கை வேளாண்மையில் இதுபோன்ற பரந்துபட்ட புரிதல் அவசியம் என்கிறார்.

ங்கர் தன்னுடைய நிலத்தில் தனியாக எந்தப் பயிரையும் பயிரிடுவதில்லை. நிலத்தின் பெரும் பகுதியில் மா, கொய்யா, மாதுளை, நாவல், முருங்கை போன்ற மர வகைகளைப் பயிரிட்டுள்ளார். தற்போது அவை பல்வேறு வளர்ச்சி நிலையில் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பயிர்களைச் சுழற்சி முறையில் அவர் பயிரிட்டுள்ளார். இரண்டு ஏக்கரில் உளுந்து பயிரிட்டு 250 கிலோ மகசூல், ஒரு ஏக்கர் பாசிப் பயறு பயிரிட்டு 120 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. பாசிப் பயறிலேயே ஊடுபயிராக மணிலா கடலையும் பயிரிட்டார். அதிலிருந்து 40 கிலோ கொண்ட 12 மூட்டைகள் கடலை கிடைத்தது.

இது மட்டுமின்றி மாப்பிள்ளை சம்பா, சௌர்ணமசூரி போன்ற நெல் வகைகளை 60 சென்ட் நிலத்தில் பயிரிட்டு, 360 கிலோ நெல் கிடைத்தது. இதேபோல் குதிரைவாலி, எள், திணை போன்ற பல்வேறு பயிர்களைப் பயிரிட்டுள்ளார். வழக்கமான முறையில் கிடைக்கும் மகசூலில் பாதி அளவுதான் இயற்கை வேளாண்மை மூலம் இவருக்குக் கிடைத்துள்ளது.

“ரசாயன வேளாண்மையில் ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டால் 20 மூட்டை நெல் கிடைக்கும். அதேநேரம் மொத்த மகசூல் மதிப்பில் பாதிக்கு மேல் செலவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதிலும் திடீரென்று விலை குறைந்தால், மேலும் லாபம் குறையும். ஆனால் இயற்கை வேளாண்மையில் 10 மூட்டை நெல் கிடைத்தாலும், நமக்கு அதிகச் செலவு இருக்காது. இரண்டு மூட்டைக்கான நெல் செலவு போனால்கூட, மீதம் முழுக்க லாபம்தான். கூடுதல் மகசூல் பெற விரும்பினால் இயற்கை பயிர் ஊக்கி, இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு நாட்டு மாடுகள் தேவை. தற்போது நாட்டு மாடுகளை வாங்கி வளர்த்துவருகிறோம்,” என்கிறார் சங்கர்.

இயற்கை விவசாயி சங்கர் தொடர்புக்கு: 08762733509

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *