இயற்கை உரம் மூலம் செவ்வாழை சாகுபடி

சென்னிமலை: சென்னிமலை அருகே இயற்கை உரங்களை பயன்படுத்தி, 12 சென்ட் நிலத்தில், 18 மாதத்தில் செவ்வாழை மூலம், 84 ஆயிரம் லாபம் அடைந்ததாக, விவசாயி பெருமிதம் தெரிவித்தார்.
சென்னிமலை யூனியன் வரப்பாளையம் பஞ்சாயத்து புளியம்பாளையத்தில் வசிப்பவர் சீனிவாசன்.இயற்கை உரங்கள், சொட்டு நீர் பாசன உதவியுடன், இவர் மாதுளை, மா, எலுமிச்சை என பயிரிட்டு, தற்போது செவ்வாழை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.

  • இவர், 12 சென்ட் நிலத்தில், 200 செவ்வாழை கன்றுகளை, கரூர் பகுதியில் இருந்து, கன்று ஒன்று, பத்து ரூபாய்க்கு வாங்கி சாகுபடி செய்தார்.
  • கன்றுக்கு குழி தயார் செய்து, அதில் சாணி, தொழுஉரம், குப்பை இடுதல், என 2,000 ரூபாய் செலவு செய்தார். பின், வாழைகளுக்கு இடையில் சிறுதானியங்களான கம்பு, தட்டைப்பயிர், எள், உளுந்து, துவரை போன்ற பயிர் வகைகளை கலந்து விதைத்துள்ளார்.
  • மூன்று மாதம் இப்பயிர்கள் வளர்த்து, வாழைத்தோட்டத்தில் அவற்றை மடித்து, அவற்றை உரமாக்கினார்.
  • கூலியாள், தண்ணீர் பற்றாக்குறைக்காக, வாழைகளுக்கு சொட்டு நீர் பாசனத்துக்கு, 5,000 ரூபாய் செலவிட்டார்.
  • விவசாய பணிகளை இவரே செய்வதுடன், மூங்கிலால் முட்டுக்கொடுத்தல் உட்பட பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து, மொத்தம், 16 ஆயிரம் செலவிட்டுள்ளார்.
  • இயற்கை உரங்களை மட்டும் நம்பி உள்ளதால், வாழைகளுக்கு கோழி எரு, ஆடு, மாட்டு சாணம், உயிரி உரகரைசலை சொட்டுநீர் மூலம் கொடுக்கிறார்.
  • காய்கள் பருமனாக மோர், எருக்கம்சாறு, மாட்டுசாணம், சிறுநீர் கலந்து தெளித்துள்ளார். தற்போது நல்ல விளைச்சல் கண்டு செவ்வாழை பழ தார்கள், குலை தள்ளி, பிரம்மாண்ட தாராக காணப்படுகிறது.
  • விற்பனை வாய்ப்புகள் அதிகரிப்பால், பெருந்துறை, விஜயமங்கலம், திருப்பூரில் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.
  • ஒரு தாரில், 100 முதல், 130 காய்கள் வரை உள்ளதால், 500 முதல், 600 வரை விலை கிடைக்கிறது. 12 சென்ட் நிலத்தில், 200 வாழை சாகுபடி செய்த சீனிவாசன், வாழை மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததால், 84 ஆயிரம் ரூபாய் லாபம் பெற்றுள்ளார். இன்னும், 30 நாட்களில் முழு அளவில் வாழைத்தார்கள் விற்பனையாகிவிடும்.
  • இயற்கை விவசாயத்தால் செய்யப்பட்ட இந்த செவ்வாழைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், தற்போது, அரை ஏக்கரில் வாழை சாகுபடிக்கு திட்டமிட்டுள்ளார்.
  • இவர், நபார்டு வங்கி உதவியுடன், உழவர் மன்றம் துவங்கி, பல விவசாயிகளுக்கு இதுபோன்ற சாகுபடி முறைகள், புதிய தொழில் நுட்பங்களை கற்று தருகிறார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *