பஜ்ஜி மிளகாயில் ரூ.6 லட்சம் லாபம்!

நவீன தொழில்நுட்பத்தில் 4 ஏக்கரில் நெதர்லாந்து ரக பஜ்ஜி மிளகாய் செடிகளை நடவு செய்து ஆறே மாதங்களில் 60 டன் வரை எடுத்து லாபம் 6 லட்சம் ரூபாய்க்குமேல் சம்பாதிக்கலாம் என்கிறார் சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை விவசாயி எம்.அழகேஸ்வரன்.

அவர் கூறியதாவது:

வறண்ட சிவகங்கையில் செம்மண் நிறைந்த திருமாஞ்சோலையில் 4 ஏக்கரில் பஜ்ஜி மிளகாய் நடவு செய்துள்ளேன்.

பயிரிடும் முறை

அக்டோபரில் 3 முறை நிலத்தை உழுது, பாத்தி கட்டி 5 செ.மீ., துாரத்திற்கு ஒரு விதை வீதம் நடவு செய்தேன். இது போன்று 4 ஏக்கருக்கு பாத்தி கட்டிய நிலத்தில் விதைகளை நடும் முன் மண்ணில் பூச்சி தாக்காமல் இருக்க மண்புழு உரம், வடித்த கஞ்சியை கலந்து தெளித்த பின் விதை நட்டேன். இவை நாற்றாக வளர 10 நாட்களாகும். அதுவரை தென்னை கீற்று குடில் அமைத்து செடியை பாதுகாத்தேன். செடி நன்கு வளர்ந்த பின் குடிலை அகற்றி தொடர்ந்து சொட்டு நீர் பாசன முறையில், தண்ணீர், மருந்துகளை வழங்கி மிளகாய் விளைச்சலில் ஈடுபட்டுள்ளேன்.

60 டன் மிளகாய் அறுவடை

செடி நடவு செய்த 50 வது நாளில் இருந்தே விளைச்சலுக்கு வந்து விடும். இது ஆறு மாதங்கள் விளையும் பயிர். ஒரு முறை 4 ஏக்கரில் இருந்து 4 டன் மிளகாய் வீதம் 15 முறைக்கு 60 டன் அறுவடை செய்யலாம். மிளகாய் செடிகளை பூச்சி, புழுக்கள் தாக்காமல் இருக்க குன்றக்குடி வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் செந்துார்குமரனிடம் ஆலோசனை பெற்றேன். இங்கு விளையும் மிளகாய் 15 செ.மீ., நீளத்திற்கு குண்டாக காட்சி அளிக்கும். ஒரு மிளகாயில் 4 பஜ்ஜி வரை போடலாம்.

ஊடுபயிராக அகத்திக்கீரை

இந்த வகை மிளகாய் செடிகள் சற்று குளிர்ச்சியுடன் இருந்தால் தான், மகசூல் நல்லபடியாக கிடைக்கும். இதற்காக எந்த நேரமும் வெயில் தாக்கம் அதிகமாக தென்படாமல் இருக்க மிளகாய்செடிகள் நடுவே 15 அடி துாரத்திற்கு ஒரு அகத்திக்கீரையை நடவு செய்துள்ளேன். இவை மரம் போன்று 7 அடி வரை வளர்ந்து, மிளகாய் செடிகளுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

துபாய் பறக்கும் மிளகாய்

இங்கிருந்து மிளகாய் மூடைகளை மதுரை மாவட்டம் பரவை, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கிலோ 35 ரூபாய் வீதம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அவர்கள் அவற்றை பக்குவப்படுத்தி கேரளா, துபாய்க்கு அனுப்புகின்றனர்.

ஆலோசனைக்கு 9786159536 .

என்.வெங்கடேசன்
சிவகங்கை

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *