ஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்!

பயிரை விதைத்து வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, தங்கள் பயிரை விற்பனை செய்ய தெரிவதில்லை என்பதுதான் விவசாயத்தின் சாபக்கேடு! பயிரை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் எனத் தெரிந்த அதேநேரத்தில் அதை சந்தைப்படுத்தும் திறனும் கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியம். சந்தை வாய்ப்பை பற்றி தெரியாத விவசாயிகள் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்திக்க நேர்கிறது. விளைவு, விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலை விபரீதமாகிவிடுகிறது.

தற்போது, பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் கூட்டாக அமைப்பை ஏற்படுத்தி தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல, தர்மபுரி மாவட்டத்திலும்,  ‘டி-மில்லட்’ என்ற நிறுவனத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம்தான் என்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரியில் விளையும் சிறுதானியங்களை, இந்தியா முழுவதும் விற்பனை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது, இந்த ‘டி-மில்லட்’.

இந்த அமைப்பை உருவாக்கிய விவசாயி சிவலிங்கம் த்திடம் பேசினோம். ‘விவசாயத்தின் மீது நாட்டம் இல்லாத என்னை விவசாயம் செய்ய வைத்தது, ‘பசுமை விகடன்’ தான். இதற்கு முன்பு, ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் மூலமாக இயற்கை விவசாயத்தில் காய்கறிகளில் செய்த அசத்தல் சாகுபடிகள்தான் இந்நிறுவனத்தை உருவாக்க வைத்தது. காரணம், சிறு தானியங்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதாலும், இடைத் தரகர்களை ஒழிப்பதும் இந்நிறுவனத்தை துவக்கியதற்கு ஓர் முக்கிய காரணம்.

ஒவ்வொரு விவசாயிகளையும் சந்தித்து இந்த நிறுவனத்தை உருவாக்கினோம். தற்போது 55 குழுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, செலவை குறைப்பது, நஞ்சில்லா உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் லாபம் கொடுக்கும் விவசாயத்திற்கு வழிவகுப்பதை  முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளோம். இதில் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு, லாபத்தில் பத்து சதவிகிதம் கொடுக்கப்படுகிறது. எங்களால் பயிரிடப்படும் கம்பு, தினை, சாமை, வரகு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை அகில இந்திய அளவில் சந்தைப்படுத்த இருக்கிறோம்.

இதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் 13 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எங்களிடம் தற்போது விளைவிக்கப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களும் தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைத்துள்ளோம். எங்களுடைய செயல்பாட்டை பார்த்து இந்தியன் வங்கி, ஒரு கோடி ரூபாய் நிதி உதவி கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். இதனை தவிர்த்து, மாநில திட்டக்குழு 22 இலட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதைக் கொண்டே ‘டி-மில்லட்’ என்ற பெயரில் எங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தப் போகிறோம். அடுத்த கட்டமாக ஆன்லைனிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்றார்.

– மு.முருகன், எஸ். டேவிட் ஆரோக்கிய செல்வி

தொடர்பு கொள்ள : 09787545231

முகநூல்: https://www.facebook.com/D-Millets-1380660848899524/

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *