ராஜராஜன் 1000 சாகுபடி டிப்ஸ்

“ராஜராஜன் 1000” என்ற செம்மை நெல் சாகுபடி விவசாயிகளிடையே பரவி வருகிறது.

* இந்த முறையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது வயலை மேடு பள்ளம் இல்லாமல் தயார் செய்வதாகும். ஏனென்றால் விவசாயிகள் 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றினை நட வேண்டிஉள்ளது.
* ஒரு ஏக்கர் சாகுபடிக்கு மூன்று கிலோ விதை நெல் போதுமானது.
* விதையினை உப்புக் கரைசல் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். 100 கிராம் சமையல் உப்பினை 10 லிட்டர் நீரில் கலந்து, இதில் விதைகளை இட்டு மிதக்கும் விதைகளை நீக்கி, அமிழ்ந்து இருக்கும் நல்ல விதைகளை மட்டும் எடுத்து தண்ணீரில் கழுவி விதையை பயன்படுத்தலாம்.
* அடுத்து பாய் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். இதனை நடவு வயலின் அருகிலோ, அல்லது வயலின் ஓரத்திலோ அமைக்கலாம்.
* ஒரு ஏக்கர் நடவிற்கு 40 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு சென்ட் நாற்றங்கால் தேவை.
* மண்ணின்கீழே பாலிதீன் பேப்பர் போட்டு விதை சட்டம் உபயோகித்து நாற்று நடவேண்டும். ஒரு விதைச்சட்டத்திற்கு 50 கிராம் வீதம் விதை போடவேண்டும்.
* நாற்றங்காலுக்கு அடியுரமாக தொழு உரம் இடவேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 2 கிலோ டிஏபி உரம் இடலாம். நாற்றங்காலில் நாற்றுக்கள் போதிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லையெனில் விதைவிட்ட 9ம் நாள் 50 கிராம் யூரியாவினை 10 லிட்டர் நீரில் கரைத்துக்கொண்டு கரைசலை நாற்றுக்கள் மேல் தெளிக்கலாம். நடவு வயலுக்கு ஏற்ற இயற்கை, செயற்கை உரங்களை இடலாம்.
* அடுத்து மார்க்கர் கருவி உபயோகிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நடவு வயலில் 25 து 25 செ.மீ. இடைவெளியில் ஒற்றை நாற்று மேலாக சதுர நடவு மேற்கொள்ளும் வகையில் அடையாளம் இடும் கருவியை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். இதனால் போதிய அளவு காற்றோட்டம், சூரிய வெளிச்சம் நாற்றுக்கு கிடைக்கிறது. மேலும் கோனோ களை எடுக்கும் கருவி கொண்டு குறுக்கும் நெடுக்கும் களையினை அழுத்தி அழிக்க ஏதுவாக உள்ளது.

கோனோ களை கருவி:


* இக்கருவியினை நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு களைக் கருவியை பயன்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் சுமார் ஒரு டன் அளவிற்கு களைகள் அமுக்கப்பட்டு பசுந்தாள் உரமாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் மண்ணில் அங்ககப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது. மேலும் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு வேர் வளர்ச்சி அதிகரிக்கின்றது.

நீர்ப்பாசனம்:

* புதிய பெயர் கொண்ட நெல் சாகுபடி முறையில் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது சாதாரண சாகுபடி முறையைவிட பாதி அளவு நீரே போதுமானதாகும்.
* முதலில் பாய்ச்சப்பட்ட நீர் மறைந்து சிறு கீறல்கள் தோன்றும் நிலையில் மீண்டும் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
* இதனால் மண்ணின் நுண் உயிர்களின் வளர்ச்சி அதிகரித்து அதன் செயல்பாடுகள் அதிகரிக்கின்றது.
* மேலும் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து வேர் வளர்ச்சி அதிகரிப்பதால் நாற்று நன்கு தூர்கட்டி வளர்கிறது.
* 25 செ.மீ. இடைவெளியில் மேலாக நடப்பட்ட ஒற்றை நாற்றிலிருந்து 35-40 வாளிப்பான பக்கத் தூர்கள் வெளிவருகின்றன. இது சாதாரண நடவைவிட மூன்று மடங்கு அதிகமானது ஆகும்.
* புதிய முறையில் பயிருக்கு மேலுரம் இடுவது முக்கியம். இதற்கு இலை வண்ண அட்டையைப் பயன்படுத்த வேண்டும். விவசாய இலாகா அதிகாரிகள் உதவியோடு இப்பணியை செய்யலாம்.
* இந்த சீசனுக்கு ஏற்ற ரகங்களை விவசாயிகள் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.
* ஆடுதுறை 36, ஆடுதுறை 45, ஆடுதுறை 47 மற்றும் 100 நாள் நெல் ஜே-13 இவைகளை சாகுபடி செய்யலாம்.

-எஸ்.எஸ்.நாகராஜன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *